தமிழக - இலங்கை மீன்வளத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு - இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமான் பேட்டி!
மீனவர் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் தமிழக - இலங்கை மீன்வளத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வேன் என்று இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3 நாட்களாக ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது. இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமான் 3 காளைகளும் வெற்றி பெற்றன.
இதனைத்தொடர்ந்து, இன்று நடைபெற்ற புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டை செந்தில் தொண்டமான் வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
“ஜல்லிக்கட்டுப் போட்டியை சர்வதேச விளையாட்டுகளில் இடம்பெறச் செய்யும் நோக்கத்தில் இலங்கையில் முதல் முறையாக நடத்தி முடித்திருக்கிறோம். வடமலாப்பூர் மக்களின் அழைப்பை ஏற்று இப்போது இங்கு வந்திருக்கிறேன். மீன்வளத்தில் எல்லை என்பதை நிர்ணயம் செய்ய முடியாது. தமிழக மீனவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். இலங்கை மீனவர்களும் இங்கே கைது செய்யப்படுகிறார்கள்.
மனிதாபிமான அடிப்படையில் அவ்வப்போது விடுதலையும் செய்யப்படுகிறார்கள். இந்தப் பிரச்னையில் சுமுகத் தீர்வு காண்பதற்கு தமிழக மற்றும் இலங்கை மீன்வளத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வேன்” என தெரிவித்தார்.