தமிழ்நாட்டுக்கு தினமும் 2700 கன அடி நீர் திறக்க வேண்டும் - காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!
தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 2700 கன அடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே தொடர்ந்து வார்த்தை மோதல்கள் நீடித்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை காவிரியில் இருந்து கர்நாடகா அரசு தொடர்ந்து தர மறுத்து வருகிறது.
இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டது. காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது. மேலும் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம், தமிழகத்துக்கு நீர் திறந்துவிடுகிறதா என்பதையும் கண்காணிக்கிறது.
இந்நிலையில் இன்று அதாவது நவம்பர் 23ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 90வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டம் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 2,700 கன அடி தண்ணீர் திறக்கவும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலுவையில் உள்ள தண்ணீரை திறந்துவிடவும் கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.