For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்!

08:53 PM Jan 06, 2025 IST | Web Editor
அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்
Advertisement

கடந்தாண்டில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்கியதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

Advertisement

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பேரார்வம் கொண்டுள்ளார். பெருந்தொழில்களைத் தொடங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கில் தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தொழில் முதலீடுகளை ஈர்த்துப் பல புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வருகிறார்.

அதே நேரத்தில் சிறுகுறு நடுத்தர தொழில்கள் அதிகளவில் தொடங்கிட ஊக்கமளிப்பதன் வாயிலாக சாதாரண மக்களும் அதிக வேலை வாய்ப்புகளைப் பெற்றுப் பயன்பெறுகின்றனர். இந்த வகையில் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் பல ஆண்டுகளாக முன்னிலையில் இருந்துவரும் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விட தமிழ்நாடு சிறுகுறு நடுத்தர தொழில்கள் மூலம் அதிக வேலை வாய்ப்புகளை வழங்கி மாபெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி குறித்த ஆய்வேட்டில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதாவது தமிழ்நாட்டில் 39,699 சிறுகுறு தொழில்கள் உள்ளன. இவை 4,81,807 தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை அளித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு 8,42,720 மனித உழைப்பு நாள்களைக் (Mandays) கொண்டுள்ளது.

மகராஷ்டிரா மாநிலத்தில் 26,446 தொழிற்சாலைகள் உள்ளன. 6,45,222 தொழிலாளிகள் உள்ளனர். இம்மாநிலம் 7,29,123 மனித உழைப்பு நாள்களைக் கொண்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் 31,031 தொழிற்சாலைகள் உள்ளன. 5,28,200 தொழிலாளிகள் உள்ளனர். இம்மாநிலம் 7,21,586 மனித உழைப்பு நாள்களைக் கொண்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குதல், அதிகளவில் உற்பத்திகள் செய்தல் ஆகியவற்றில் மனித உழைப்பு நாள்களில் குஜராத் மகாராஷ்டிரம் மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என்பதை இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கோவிட் 19 காலத்தில் கதவடைப்பு முதலிய இடர்பாடுகளால் தொழில்களும் வேலை வாய்ப்புகளும் குறைந்த நிலையை இந்த திமுக அரசு பொறுப்பேற்றபின் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு சீர்ப்படுத்தி வளர்ச்சியில் இன்று நல்ல முன்னேற்ற நிலையை அடைந்துள்ளது. திமுக அரசு வேலை வாய்ப்புகளை அதிகரித்துள்ளதுடன் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கச் செய்து சிறந்த முறையில் வெற்றி கண்டுள்ளது.

இந்தப் புள்ளி விவரங்கள் அடிப்படையில் தமிழ்நாடு 8,42,720 மனித உழைப்பு நாள்களைக் கொண்டு தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஒரு தொழிலாளிக்கு சராசரியாக 1.75 மனித உழைப்பு நாள்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மகாராஷ்டிரம் ஒரு தொழிலாளிக்கு 1.13 மனித உழைப்பு நாள்களுக்கும், குஜராத் ஒரு தொழிலாளிக்கு 1.37 மனித உழைப்பு நாள்களுக்கும் மட்டுமே வேலை வாய்ப்புகளை அளிக்கின்றன. இந்தப் புள்ளி விவரங்கள் மற்ற இரண்டு மாநிலங்களை விட தமிழ்நாடு வேலை வாய்ப்புகளை அதிகரித்து உழைப்பாளிகளைத் தகுந்த முறையில் பயன்படுத்தியுள்ளது என்ற உண்மையைப் புலப்படுத்துகின்றன.

அதேபோல பெரிய மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் மனித உழைப்பு நாள்கள், தொழிலாளிகள் இடையே பெரிய வேறுபாடு காணப்படுவதாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement