கூகுள் மேப்பால் சேற்றில் சிக்கிய மாற்றுத்திறனாளி... விரைந்து மீட்ட தமிழ்நாடு போலீசுக்கு குவியும் பாராட்டுகள்!
வத்தலகுண்டு அருகே கூகுள் மேப்பை பார்த்து சேற்றில் சிக்கிக்கொண்ட, கர்நாடக மாற்றுத்திறனாளி ஐயப்ப பக்தரை திண்டுக்கல் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே எம்.வாடிப்பட்டி சமுத்திரம் கண்மாய் பகுதியில், மாற்றுத் திறனாளி ஐயப்ப பக்தர் ஒருவர் மூன்று சக்கர வாகனத்துடன் சேற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வத்தலகுண்டு மற்றும் பட்டிவீரன்பட்டி போலீசார், மூன்று சக்கர வாகனத்துடன் சேற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த ஐயப்ப பக்தரை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமர் என தெரியவந்தது. மாற்றுத்திறனாளியான இவர், தனது மூன்று சக்கர வாகனத்தில் கர்நாடகாவில் இருந்து சபரிமலை சென்றுள்ளார். பின்னர் மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்த போது, தேசிய நெடுஞ்சாலையை தவிர்த்து குறுக்குப் பாதையில் செல்வதற்காக கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளார்.
அப்போது நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வத்தலகுண்டை அடுத்துள்ள எம்.வாடிப்பட்டி பகுதிக்குள் சென்றவர், தேசிய நெடுஞ்சாலையை தொடும் சாலையை தவறவிட்டு, சமுத்திரம்
கண்மாய்க்கு செல்லும் சாலையில் சென்றுள்ளார். அங்குள்ள பாலத்தைக் கடந்தவர்
எதிர்பாராத விதமாக கண்மாய் பகுதியில் இருந்த சேற்றில் வசமாக சிக்கி உள்ளார்.
இரவு நேரம் என்பதாலும், அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததாலும்
உதவிக்கு யாரும் வரவில்லை.
இதனைத் தொடர்ந்து சுமார் 7 மணி நேரம் சேற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த
பரசுராமர் கர்நாடகா காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து கர்நாடக காவல்துறை மூலம் திண்டுக்கல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நள்ளிரவு 2 மணிக்கு ஐயப்ப பக்தரை பத்திரமாக மீட்டு உள்ளனர். மீட்கப்பட்ட ஐயப்ப பக்தரை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்த போலீசார், அவருக்கு உணவு வழங்கினர்.
நேற்று காலை சேற்றில் சிக்கிய மூன்று சக்கர வாகனத்தை மீட்ட போலீசார், ஐயப்ப பக்தரை பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விரைந்து செயல்பட்ட தமிழ்நாடு போலீசாருக்கு, கர்நாடகா காவல்துறை நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தது.