Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழால் அதிர்ந்த மக்களவை! - அரசியல் சாசன புத்தகத்துடன் பதவியேற்ற தமிழ்நாடு எம்.பி.க்கள்!

03:31 PM Jun 25, 2024 IST | Web Editor
Advertisement

மக்களவையில் அரசியலமைப்புச் சட்ட புத்தகத்துடன், தமிழ்நாடு எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர். 

Advertisement

18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.  இந்தக் கூட்டத் தொடரில் முதலில் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  கூட்டத்தின் முதல் நாளிலேயே பரபரப்பான பல சம்பவங்கள் நடந்தன.  இடைக்கால சபாநாயகர் நியமனம் தொடர்பாக ஏற்கனவே பாஜக, காங்கிரஸ் கட்சி இடையே மோதல் நிலவியது.

8 முறை எம்பியாக இருந்த காங்கிரசின் கே.சுரேஷை  தற்காலிக சபாநாயகராக நியமிக்காமல்,  பாஜகவை சேர்ந்த 7 முறை எம்பியான பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.  மக்களவை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே,  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,  திமுக எம்பி டி.ஆர்.பாலு,  சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள்,  நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்கனவே காந்தி சிலை இருந்த இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சோனியா காந்தியும் அவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

தற்காலிக சபாநாயகர் நியமன விவகாரத்தில் பாஜக அரசியலமைப்பை மீறிவிட்டதாக குற்றம்சாட்டி,  அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி ‘அரசியலமைப்பைக் காப்போம்,  ஜனநாயகத்தைக் காப்போம்’ என அவர்கள் முழக்கமிட்டனர்.  அதன் பின்னர் அவர்கள் அரசியலமைப்பு புத்தகத்துடனே அவைக்குள் சென்றனர்.

இதனையடுத்து முற்பகல் 11 மணிக்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டு மக்களவை தொடங்கியது.  முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி முதலில் எம்பியாக பதவியேற்றார்.  அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த ராகுல் காந்தி,  அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எம்பிக்கள் கைகளில் அரசியல் சாசனப் புத்தகத்தை உயர்த்தி காண்பித்தனர்.  இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தற்காலிக துணை சபாநாயகர்களாக கொடிக்குன்னில் சுரேஷ்,  டி.ஆர்.பாலு,  சுதிப் பந்தோபாத்யாய ஆகியோர் இந்தியா கூட்டணி எம்பிக்களை பதவியேற்க அழைத்தார் தற்காலிக சபாநாயகர்.  இதனை இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஏற்க மறுத்து விட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.  இதனையடுத்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங்,  அமித்ஷா உள்ளிட்டோர் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்பியாக பதவியேற்ற போது,  நீட் தேர்வு முறைகேடுகளை முன்வைத்து எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  அப்போதும் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது.  முதல் நாளில் மொத்தம் 280 மக்களவைஉறுப்பினர்கள் நேற்று கடவுளின் பெயராலும் மனசாட்சியின் பெயராலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.  ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் தாய்மொழிகளில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து மக்களவைவில் 2-வது நாளாக இன்று தமிழ்நாடு உட்பட இதர மாநில எம்பிக்கள் பதவியேற்கின்றனர்.  தமிழ்நாட்டின் 39 எம்பிக்களும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை பதவியேற்றனர்.

வாழிய வையகம்-! வாழ்க தமிழ்! - சசிகாந்த் செந்தில்

அப்போது முதலாவதாக திருவள்ளூர் தொகுதி எம்பி சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்) அரசியல் சாசனப் புத்தகத்துடன் தமிழில் உறுதி மொழியேற்றார்.  வாழிய வையகம்-! வாழ்க தமிழ்! தலித்- ஆதிவாசிகள்-சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நிறுத்துக என முழக்கமிட்டார் சசிகாந்த் செந்தில்.

திராவிடம் வாழ தளபதி வாழ்க! - கலாநிதி வீராசாமி

அடுத்ததாக பதவியேற்ற திமுக எம்பி கலாநிதி வீராசாமி,  பெரியார் அண்ணா, கலைஞர் வாழ்க! திராவிடம் வாழ தளபதி வாழ்க! தமிழ் வெல்க! என முழக்கமிட்டார்.

வாழ்க தமிழ்த் திருநாடு - தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழச்சி தங்கபாண்டியன் தமிழில் பதவியேற்று வளர்க முத்தழிறிஞர் புகழ்! வாழ்க தளபதி! வாழ்க தமிழ்த் திருநாடு என முழக்கமிட்டார்.

வாழ்க உதயநிதி ஸ்டாலின் - தயாநிதி மாறன்

திமுக எம்பி தயாநிதி மாறன்,  வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர்! வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! வாழ்க உதயநிதி ஸ்டாலின்~ வேண்டாம் நீட்! BAN நீட் என முழக்கமிட்டார்.

திமுக எம்பி செல்வம் பெரியார் அண்ணா , கலைஞர், ஸ்டாலின், உதயநிதி வாழ்க என முழக்கமிட்டார்.

திமுக மக்களவை குழு தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உறுப்பினருமான டிஆர்பாலு தமிழில் பதவியேற்றார்.

தமிழில் பதவியேற்றார் அரக்கோணம் தொகுதி உறுப்பினர் ஜெகத்ரட்சகன்.

தெலுங்கில் பதவியேற்ற கோபிநாத்

கிருஷ்ணகிரி தொகுதி எம்பி கோபிநாத் தெலுங்கு மொழியில் பதவியேற்றார் ஜெய் தமிழ்நாடு என முழங்கினார்.

எங்கள் வருங்காலம் உதயநிதி - கதிர் ஆனந்த்

தாய் தந்தைக்கு வணக்கம்! வெல்க தமிழ்நாடு! வாழ்க தளபதி! வருங்கால எங்கள் உதயநிதி என முழக்கமிட்டார் கதிர் ஆனந்த் எம்பி.

தருமபுரி எம்பி மணி பதவியேற்ற பின்னர் கருணாநிதி ஸ்டாலின் வாழ்க என முழக்கமிட்டார்.

எ.வ.வேலு வாழ்க! - அண்ணாதுரை

திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை தமிழில் பதவியேற்றார்.  வாழ்க தமிழ்! கருணாநிதி- ஸ்டாலின் - உத்யநிதி - பொதுப்பணித்துறை அமைச்சர் (எ.வ.வேலு) வாழ்க என முழக்கமிட்டார் அண்ணாதுரை.

ஆரணி எம்பி தரணிவேந்தன்,  கருணாநிதி- ஸ்டாலின், உதயநிதி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க என முழக்கமிட்டார்.

வாழ்க அம்பேத்கர்! வாழ்க பெரியார்! வாழ்க எழுச்சித் தமிழர்!

விழுப்புரம் தொகுதி விசிக உறுப்பினர் ரவிக்குமார் தமிழில் பதவியேற்றார்.  பின்னர் வாழ்க தமிழ்! வாழ்க அம்பேத்கர்! வாழ்க பெரியார்! வாழ்க எழுச்சித் தமிழர்! சமத்துவம்- சமூகநீதி வெல்க என முழக்கமிட்டார்.

திமுக எம்பி மலையரசனும் கருணாநிதி- தளபதி-ஸ்டாலின் -எ.வ.வேலு வாழ்க என முழக்கமிட்டார்.

திமுக எம்பி டிஎம் செல்வகணபதி பதவியேற்ற பின் வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு; கருணாநிதி-ஸ்டாலின் - வருங்கால தமிழ்கம் உதயநிதி வாழ்க என முழங்கினார்.

நாமக்கல் எம்பி மாதேஸ்வரன்

தீரன் சின்னமலை காளியங்கராயன் ஆசியோடு என நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் பதவியேற்றார். பின்னர் கோவை செழியன்- கரூர் முத்துகவுண்டர் புகழ் - ஈஸ்வரன் ஆகியோரை வாழ்த்தி முழக்கமிட்டார்.

வாழிய செந்தமிழ்! வாழிய நற்றதமிழர்!

திருப்பூர் தொகுதி சிபிஐ உறுப்பினர் சுப்பராயன் தமிழில் பதவியேற்றார்.  வாழிய செந்தமிழ்! வாழிய நற்றதமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு என முழக்கமிட்டார்.

டிஆர் பாலு, ஆ.ராசா தமிழில் பதவியேற்ற பின்னர், முழக்கங்கள் எழுப்பவில்லை.

தொண்டர்கள்- பெற்ற அன்னை குடும்பத்தாருக்கு நன்றி!

கோவை கணபதி ராஜ்குமார் வாழ்க தமிழ்! கருணாநிதி- ஸ்டாலின் - உதயநிதி வாழ்க! உழைத்த தொண்டர்கள்- பெற்ற அன்னை குடும்பத்தாருக்கும் நன்றி என்றார்.

பொள்ளாச்சி ஈஸ்வரசாமி தமிழில் பதவியேற்றார்.  பின்னர் பெரியார்- அண்ணா- கருணாநிதி-ஸ்டாலின் - உதயநிதியை வாழ்த்தி முழக்கமிட்டார்.  எதிர்காலம் சின்னவர் என உதயநிதியை குறிப்பிட்டார்.

வெல்க மார்க்சியம்

திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கட்சி எம்பி சச்சிதானந்தம் வெல்க மார்க்சியம் என முழக்கமிட்டார்.

பெரம்பலூர் தொகுதி எம்பி அருண்நேரு, கரூர் எம்பி ஜோதிமணி,  தமிழில் பதவியேற்றனர்.

ஜெய் டெமாக்கரசி! ஜெய் கான்ஸ்டிடியூசன்

சிதம்பரம் தொகுதி எம்பியும் விசிக தலைவருமான தொல்.திருமாவளவன், உளமார உறுதியேற்கிறேன்; ஜெய் டெமாக்கரசி!ஜெய் கான்ஸ்டிடியூசன் என முழங்கினார்

முருகப்பெருமான் மீது உறுதி கூறுகிறேன்

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்பி சுதா,  தமிழ் கடவுள் முருகப் பெருமான் மீது உளமாற உறுதி கூறுகிறேன் என்றார்.  ராகுல் காந்தியை வாழ்த்தி முழக்கமிட்ட சுதா, ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ எனவும் முழங்கினார்.

மார்க்சியம் வெல்க!

நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் செல்வராஜ் மார்க்சியம் வெல்க என முழங்கினார்.

காவிரி நீரை திறக்க வலியுறுத்தி முழக்கம்

தஞ்சை தொகுதி எம்பி முரசொலி தமிழில் பதவியேற்றார். அப்போது கருணாநிதி- ஸ்டாலின்- உதயநிதி வாழ்க என்றார்.  காவிரி நீரை திறக்க வலியுறுத்தி முழக்கமிட்டார்.

வைகோவை போல் முழுக்கமிட்ட துரை வைகோ!

திருச்சி தொகுதி மதிமுக எம்பி துரை வைகோ, சமூகநீதி- சமத்துவம்- மனிதநேயம் வாழ்க- பரவட்டும் என கைகளை உயர்த்தி தந்தை வைகோவைப் போல முழக்கமிட்டார்.

தமிழ் வாழ்க! மார்க்சியம் வெல்க!

தமிழ் வாழ்க! மார்க்சியம் வெல்க என முழக்கமிட்டார் மதுரை சு.வெங்கடேசன் எம்பி.

ஸ்டாலின் படத்தை எடுத்துக் காட்டிய தங்கதமிழ்செல்வன்!

தங்க தமிழ்ச்செல்வன் எம்பி எந்த முழக்கமும் எழுப்பவில்லை ஆனால் சட்டப்பையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் படத்தை சபையில் எடுத்து காட்டினார்.

இந்திய அரசியலமைப்பு வாழ்க! ஜெய்ஹிந்த் என காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் முழக்கமிட்டார்.

வாழ்க தமிழ்- மதச்சார்பின்மை- சமூகநீதி- ஜனநாயகம்!

ராமநாதபுரம் தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி (முஸ்லிம் லீக்) வாழ்க தமிழ்- மதச்சார்பின்மை- சமூகநீதி- ஜனநாயகம் என முழங்கினார்.

அரசியல் சாசன புத்தகத்துடன் பதவியேற்ற கனிமொழி

தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தமிழில் பதவியேற்றார்.  அப்போது அவர் அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்திருந்தார்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். வாழ்க!

தென்காசி தொதுதி உறுப்பினர் டாக்டர் ராணி ஶ்ரீகுமார் பதவியேற்றார்.  அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் வாழ்க என முழக்கமிட்டார்.

காங்கிரஸின் ராபர்ட் புரூஸ் எம்பி தமிழில் பதவியேற்றார்.

காமராஜர்- ராஜீவ்காந்தி வாழ்க!

நாகர்கோவில் தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் காமராஜர்- ராஜீவ்காந்தி வாழ்க என முழக்கமிட்டார்.

இதே போல் புதுச்சேரி தொகுதி மக்களவை உறுப்பினரான வைத்திலிங்கமும், தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.

Tags :
தமிழ்தமிழ்நாடுIndiaINDIA Alliancelok sabhaLok sabha 2024mpNEWS 7 TAMILNews 7 Tamil UpdatesParliament sessionspeakerTamil
Advertisement
Next Article