Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வேளாண் பட்ஜெட்டை பார்த்து தமிழ்நாடே சிரிக்கிறது" - அண்ணாமலை விமர்சனம்!

வேளாண் பட்ஜெட்டைப் பார்த்து தமிழ்நாடே சிரிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாலை விமர்சனம் செய்துள்ளார்.
08:33 PM Mar 15, 2025 IST | Web Editor
வேளாண் பட்ஜெட்டைப் பார்த்து தமிழ்நாடே சிரிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாலை விமர்சனம் செய்துள்ளார்.
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் பிடித்த பழமொழி, 'பேரு பெத்த பேரு, தாக நீரு லேது' அப்படித்தான் இருக்கிறது தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட். ஒவ்வொரு பக்கத்திலும், திருக்குறளையும், புறநானூற்றுப் பாடல்களையும் வைத்து நிரப்பியிருக்கிறார் அமைச்சர் M.R.K. பன்னீர்செல்வம். ஆனால், அவற்றிற்கேற்பச் செயல்படுவதை மட்டும் மறந்து விடுகிறது திமுக அரசு.

Advertisement

கடந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் அறிவித்த, 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி, ரசாயன உரம் பயன்பாட்டைக் குறைத்து மண்ணின் வளம் காக்க ரூ. 6 கோடியே 27 லட்சம், 3 லட்சம் ஏக்கரில் எண்ணெய் வித்துகள் பயிரிட ரூ. 36 கோடி, பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களின் பரப்பு விரிவாக்கம் செய்ய ரூ. 108 கோடி, மாவிற்கான சிறப்புத் திட்டம் ரூ. 27 கோடியே 48 லட்சம், வாழைக்கான சிறப்புத் திட்டம் ரூ.12 கோடியே 73 லட்சம், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பலா மதிப்புக் கூட்டு மையம் அமைக்க 5.16 கோடியே 13 லட்சம், கன்னியாகுமரியில் சூரியத் தோட்டம், 7 மாவட்டங்களில் உள்ள 110 கிராமங்களில், ரூ. 110 கோடியே 59 லட்சம் மதிப்பில் வறட்சி தணிப்புக்கான சிறப்பு உதவித் திட்டம் என அள்ளித் தெளித்த திட்டங்கள், அதன் பிறகு பேச்சு மூச்சின்றிக் கிடக்கின்றன.

மறுபடியும் 60 பக்கங்களை நிரப்பிக் கொண்டு இந்த ஆண்டு வேளான் பட்ஜெட் என்று வந்திருக்கிறார் அமைச்சர். கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டின்படி, தமிழ்நாட்டில் 2022 - 2023 ஆம் ஆண்டில், மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர். இந்த ஆண்டு பட்ஜெட்டின்படி, சாகுபடிப் பரப்பு 151 லட்சம் ஏக்கர்தான் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது. இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் அமைச்சர்?

அதுபோல, பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் கூறியபோது மறுத்தவர்கள், இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்.
திமுக நிதியமைச்சருக்கு கூவம், அடையாறு சீரமைத்தல் எப்படியோ, அப்படியே, திமுக விவசாயத் துறை அமைச்சருக்கு கால்வாய்கள் புனரமைத்தல். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நிதி ஒதுக்குவார்கள், பருவமழை வரும் முன்பே, கால்வாய்கள் தூர்வாரக் கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்.

அதன்பிறகு, மழை வெள்ளம் போக வழியின்றி விவசாய நிலங்கள் வெள்ளக்காடானதும் மத்திய அரசு தரும் நிவாரண நிதியை, தங்கள் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வார்கள். கால்வாய்களை தூர்வாரக் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.3,581 கோடி இந்த ஆண்டு ரூ.3,954 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, காவிரி டெல்டா கால்வாய்களைத் தூர் வார கடந்த ஆண்டு ரூ.110 கோடியும், இந்த ஆண்டு ரூ 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது? கடந்த ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் புதிய பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும், மூன்றாம் ஆண்டில் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில், கடந்த 4 ஆண்டுகளில் 1 லட்சத்து 81 ஆயிரம் பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 2023-24 நிதியாண்டில் தெரிவிக்கப்பட்ட 50,000 புதிய மின் இணைப்புகள் முழுவதுமாக வழங்கப்படவில்லை என்பதும், 2024-25 நிதியாண்டில் மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை என்பதும் தெளிவாகிறது. ஏதும்
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், 2 லட்சத்து 22 ஆயிரம் ஏக்கரில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு மொத்தமாக 773 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. (அதில் மத்திய அரசின் பங்கு 232 கோடி ரூபாய்).

இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில், 3 லட்சம் ஏக்கர் நிலத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த 168 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் ஏக்கர் நிலத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க 773 கோடி ரூபாய். ஆனால் 3 லட்சம் ஏக்கர் நிலத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க 168 கோடி ரூபாய். ஆக, கடந்த ஆண்டு மத்திய அரசின் பங்கு ரூ. 232 கோடி நிதியை மட்டும்தான் பயன்படுத்தியிருக்கிறார்களே தவிர இவர்கள் ஒதுக்கியதாகச் சொன்ன மொத்தம் ரூ. 773 கோடி என்பது பொய் என்பதாகத்தானே கொள்ள முடியும்.

மலைவாழ் உழவர்கள் சுமார் 63,000 பேருக்கு குறுதானிய சாகுபடி, இடுபொருள்கள் விநியோகம், வேளாண் இயந்திரங்கள் வாங்குதல், மதிப்புக்கூட்டுதல், நுண்ணீர்ப்பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகியவற்றிற்கு ரூ. 22 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். இவர்கள் கணக்குப்படி, 63,000 மலைவாழ் உழவர்கள் என்றால், ஒதுக்கப்பட்டுள்ள நிதி, ஒரு மலைவாழ் உழவருக்கு சுமார் ரூ. 3,600 மட்டுமே. இந்த நிதியில் கூறியிருக்கும் திட்டங்களில் என்ன சாத்தியமாகும் என்பதை அமைச்சர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு கூறிய திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. இந்த ஆண்டு கூறப்பட்டுள்ளவையும் பெயரளவுக்கு இருக்கின்றனவே தவிர, நடைமுறைக்குச் சற்றும் சாத்தியமில்லாதவை. முதலமைச்சரின் ஆசைக்காக, ஆண்டுதோறும் ஒரு வேளாண் பட்ஜெட் அறிவிப்பதனால் விவசாயிகளுக்கு என்ன பயன்? இறுதியாக, வேளாண் பட்ஜெட்டில் சுவை இல்லை என்று யாரும் கூறிவிடக் கூடாது என்பதற்காக, துறையின் சாதனைகள்' என்ற பட்டியலில், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைக்கப்பட்ட "கலைஞர் நூற்றாண்டு பூங்காவைச் சேர்த்து நகைச்சுவை செய்திருக்கிறார்கள். இந்த பட்ஜெட்டைப் பார்த்து, தமிழ்நாடே சிரிக்கிறது"

இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாலை தெரிவித்துள்ளார்.

Tags :
Agri BudgetAnnamalaiBJPBudgetBudget2025mrk panneer selvamTamil Nadu Agri BudgetTN Assemblytn BudgetTN Budget 2025TN Govt
Advertisement
Next Article