நடப்பாண்டில் அதிக கடன் வாங்கிய மாநிலம் ‘தமிழ்நாடு’ - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சத்னம் சிங் சந்து நாடாளுமன்றத்தில், கடந்த இரண்டு நிதியாண்டுகளாக நாடு முழுவதும் மாநில அரசுகள் கடன் பெற அனுமதித்த அளவு மற்றும் அதில் மாநில அரசுகள் பெற்றுள்ள கடன் அளவு குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, நடப்பு நிதியாண்டு மற்றும் முந்தைய நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த GSDP-யில் 3% மாநில அரசுகள் கடன் பெற மத்திய அரசு அனுமதி வழங்கியதாகவும், மின்சாரத்துறை செயல்திறன் அடிப்படையில் தேவைப்பட்டால் கூடுதலாக 0.50% கடனை மாநில அரசுகள் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 2023-2024ம் நிதியாண்டில் தமிழ்நாடு உள்ளிட்ட 28 மாநிலங்களுக்கு 11,11,250 கோடி கடன் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கிய நிலையில், 9,89,621 கோடி ரூபாய் கடனை மாநில அரசுகள் திறந்த வெளி சந்தையில் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 2024-2025 நடப்பு நிதியாண்டில் 28 மாநிலங்கள் 10,89,838 கோடி ரூபாய் கடன் பெற மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், பிப்ரவரி 28ம் தேதி வரை 8,34,243 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 2023-2024ம் நிதியாண்டில் 1,22,664 கோடி ரூபாய் கடன் பெற மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், 1,13,001 கோடி ரூபாய் கடன் தமிழ்நாடு அரசு பெற்றுள்ளதாகவும், 2024-2025ம் நிதியாண்டில் 1,24,074 கோடி ரூபாய் கடன் பெற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 1,01,025 கோடி ரூபாய் கடன் தமிழ்நாடு அரசு பெற்றுள்ளதாக மத்திய நிதித் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நடப்பு மற்றும் முந்தைய நிதி ஆண்டுகளில் நாட்டிலே அதிக கடன் பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.