கல்வியிற் சிறந்த தமிழ்நாடு! செய்தொழிலுக்கு ஏற்ற தமிழ்நாடு!
UmagineTN தொழில்நுட்பக் கருத்தரங்கு ஜனவரி 9,10 ஆகிய தேதிகளில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டது. இந்த இரண்டு நாள்களில் 4 அரங்குகளில் செயற்கை நுண்ணறிவுத் தொடங்கி விண்வெளி ஆராய்சிகள் வரை 18க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கருத்துரையாடல்கள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல சிறப்பு விருந்தினர்கள் தமிழ்நாட்டில் உள்ள கல்விக் கட்டமைப்பையும், இங்கு இருக்கும் மனிதவள ஆற்றலையும் வியந்து பாரட்டியதோடு தொழில் செய்வதற்கு ஏதுவான மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது எனத் தெரிவித்தனர்.
சிலர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு: ஜனவரி 9 ஆம் தேதி மதியம் நடைபெற்ற கருத்தரங்கில் ஒன்றில் பேசிய குடியரசு கொரியவின் தூதர் சாங் நியுன் கிம் “ NIRF தரப்பட்டியலில் 40-50 விழுக்காடு தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களே இடம்பிடித்துள்ளன. இதுவே தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான முக்கிய காரணியாக இருக்கிறது. ஹூண்டே (Hyundai) போன்ற பல்வேறு நிறுவனங்கள் இங்குத் தொழில்தொடங்கி நிலைத்திருப்பதற்கு இங்குள்ள கல்வி கட்டமைப்பும், திறன்மிகுந்த நபர்களுமே காரணம்” எனக் கூறினார்.
பிரான்சு நாட்டின் துணைத் தூதர் கிரிஸ்டோப் பாராமௌல் பேசுகையில் “தற்போது உள்ள தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை எங்கள் நாட்டிலும் நடைமுறைப் படுத்த பரிந்துரை செய்வேன். குறிப்பாக Umagine போன்ற கருத்தரங்குகளும் நல்ல உதாராணமாக இருக்கிறது. தொடர்ந்து தமிழ்நாட்டுடன் பல்வேறு திட்டங்களுடன் இணைந்து பயணிப்போம்” எனக் குறிப்பிட்டார்.
ஜனவரி 10 ஆம் தேதி நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய மெரிட் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கர்னலியேல் கான்லான் “தமிழ்நாடு எல்லோரையும் அரவணைக்கும் மாநிலமாகத் திகழ்கிறது. வட இந்திய சூழலை விட தமிழ்நாட்டுச் சூழல் தொழில் செய்ய ஏதுவாக இருக்கிறது. யாரைக் கண்டும் அஞ்சுவதில்லை, யாரையும் அச்சுறுத்துவதில்லை” எனத் தெரிவித்தார்.
Expleo நிறுவனத்தின் இயக்குநர் உன்னிகிருஷ்ணன் அனில்குமார் “தமிழ்நாட்டில் கல்விநிறுனங்கள் எல்லா மாவட்டங்களில் பரவி இருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு வகையான தொழில்நிறுவனங்கள் இருக்கின்றன. இதுவே பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளையும், கற்கும் வாய்ப்புகளையும் வழங்குகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஓசூரில் தொழில்நுட்பப் பூங்கா நிறுவப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கதாகும். பெங்களூரில் அதீத நெரிசல்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஓசூரை தேர்ந்தெடுத்திருப்பது நல்ல உத்தியாகும். ஓசூரைத் தொடர்ந்து சேலத்திலும் தொழில்நுட்பப் பூங்கா அமைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
கல்வியற் சிறந்த தமிழ்நாடு! செய்தொழிலுக்கு ஏற்ற தமிழ்நாடு!! என்பதனை மேற்சொன்னவர்களின் கூற்றுகள் பறைசாற்றுகின்றன.