"அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி !
சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள கோடம்பாக்கம் மண்டலம், 140-வது வார்டில் உள்ள கோவிந்தன் சாலையில் ரூபாய் 5.10 கோடி மதிப்பில் 4 தெருக்களுக்கு 1.54 கி.மீ நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணியினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
" 20 சென்டிமீட்டர் மழை பெய்தால் அதை தாங்கும் அளவிற்கு மழை நீர் வடிகால் பணிகள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் அடுத்த வருடம் மழைநீர் தேங்காத அளவிற்கு மழை நீர் வடிகால் பணிகள் செய்யப்படும். மற்ற மாநிலங்களில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு திட்டம் ஆட்சிக்கு வர உதவியாக உள்ளது. அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சி தான் தமிழகத்தின் இருண்ட காலம்.
பொய்யான, பொருந்தாத காரணங்களை சொல்லி மதுரவாயில் துறைமுகம் பாலத்திற்கு முட்டுக்கட்டை போட்டார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அந்தப் பாலம் அமைந்திருந்தால் கருணாநிதிக்கு புகழ் சேர்ந்துவிடும் என்பதால் அந்த பாலத்தை தடுத்து நிறுத்தினார். எடப்பாடி பழனிச்சாமி அந்த பாலத்தை கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் ஆட்சியில் தான் தமிழ்நாடு முன்னேறியது என்று எப்படி சொல்கிறார் எடப்பாடி?
2017 ஆம் ஆண்டு எடப்பாடி நீட் தேர்வுக்கு ஒப்புதல் கொடுத்தார் அதனால் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டு மக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமியின் நிர்வாக திறமை தெரியும். தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை இந்தியாவின் மற்ற மாநிலங்கள் நகல் எடுத்து செய்வது மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு நாடுகள் குறிப்பாக கனடா, இலங்கை போன்ற நாடுகள் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துகிறது.
ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்கள் நகல் எடுத்து மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துகிறது. தமிழ் புதல்வன், நான் முதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்களால் மாணவர்கள் உயர்கல்வியில் சேரும் எண்ணிக்கை அதிகரித்து இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் உயர்கல்வியில் சேரும் மாணவ மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது, கருணாநிதி ஆட்சி காலத்தில் வந்த திட்டங்கள் தற்பொழுது முதலமைச்சர் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் என்று மக்கள் அறிவார்கள் இதை மறைக்க எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் எத்தனை ஜமகாலங்களை கொண்டு வந்தாலும் அழிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.