"இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது" - அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் !
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி கூடியது. அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றாலும், சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசித்த ஆளுநர் உரை அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11-ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையும் இடம்பெற்றது. அத்துடன் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (மார்ச்.14) மீண்டும் கூடியது. தொடர்ந்து, 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது உரையாற்றியவர்,
"இன்றைய தமிழ்நாடு கல்வியில், சுகாதாரத்தில், வேலைவாய்ப்பில், வேளாண்மையில், தொழில் துறையில் சிறந்து விளங்குவதற்கான விதைகள், 100 ஆண்டுகளுக்கு முன்பே நீதிக்கட்சியின் ஆட்சியில் விதைக்கப்பட்டவை. நமது நாடு விடுதலை பெற்ற பின் சில மாநிலங்கள் வறுமை ஒழிப்பிற்கு முன்னுரிமை கொடுத்தனர்.
வேறு சில மாநிலங்களோ தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் தமிழ்நாடு மட்டுமே, கல்வி, வறுமை ஒழிப்பு, சுகாதாரம், தொழில் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியை இலக்காக கொண்டு முன்னேற தொடங்கி வெற்றியை கண்டது.
அனைவருக்கும் அடிப்படை கல்வி என்பதை நீண்ட கால இலக்காக கொண்டு நாடு நகர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், கிராமம்தோறும் கல்வி கூடங்களை உருவாக்கியது நாம். மழலை குழந்தைகளுக்கான மத்திய உணவு திட்டம், சத்துணவு திட்டம், காலை உணவு திட்டம் என்று தமிழ்நாடு அறிமுகப்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை பார்த்து இந்திய நாடு மட்டுமல்ல உலக நாடுகளே வியந்து பாராட்டியுள்ளது.
ஏழை எளிய மக்களுக்காக குடியிருப்புகள் உருவாக்க தனி வாரியம் உருவாக்கியவர் கருணாநிதி. முன்னோடியாக மக்களுக்கு, மகளிருக்கு, வாக்குரிமை வழங்கிய சென்னை மாகாணம் காட்டிய வழியில், பிற்காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய முன்னணி மாநிலங்களின் பட்டியலியல் தமிழ்நாடும் இடம்பெற்றது. இருமொழி கொள்கை தொடர்ந்து சமரசமின்றி முன்னெடுக்கப்படும்.
பிரபல பிரெஞ்சு பேராசிரியர் தாமஸ் பிக்கெட்டி In equality is a choice bus we can choose different path என்பதன் அடிப்படையில் வெற்றி நடைபோடும் என்று குறிப்பிட்டதை போல தமிழகம் தேர்ந்தெடுத்த பாதை தனித்துவமிக்கதாக மனிதநேயம், சமூகநீதி, பரவலான பொருளாதார வளர்ச்சி, மகளிர் நலன், விளிம்புநிலை முன்னேற்றம், தமிழ் பண்பாடு என தமிழ்நாடு வெற்றி நடை பயின்ற அந்த பயணம் வரலாற்று சிறப்புமிக்கது.
இதுவரை திருக்குறள் 28 இந்திய மொழிகளிலும், 35 உலக மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது. இன்னும் 28 மொழிகளில் திருக்குறள் மொழிப்பெயர்க்கப்படவிருக்கிறது. இது நடந்துமுடிந்தால் அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்ட நூலாக ஐநா-வால் அங்கீகரிக்கப்பட்ட நூலாகவும் திருக்குறள் மாறிவிடும்.
அண்ணாவின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. திருக்குறளை உலகெங்கும் பரப்புவது நமது தலையாய கடமையாகும். இருமொழி கொள்கையால் உலகம் எல்லாம் தமிழர்கள் தடம் பதித்து வருகின்றனர். இருமொழி கொள்கை தொடர்ந்து சமரசமின்றி முன்னெடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் வளர்ச்சி முறைப்படுத்தப்பட வேண்டும். பெருமளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் தொழிற்ச்சாலைகள் தமிழ்நாடு எங்கும் பரவலாக உருவாக வேண்டும். நவீன கட்டமைப்பு வசதிகள் உருவாகும்போது பசுமையாற்றல் வளங்களையும் முறையாக பயன்படுத்திட வேண்டும்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.