ஓரணியில் தமிழ்நாடு - வீடு வீடாக சென்று முதல்வர் பரப்புரை!
தமிழகத்தில் திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பாஜகவிற்கு தமிழகத்தின் மீதான விரோதப் போக்கை மக்களிடம் கொண்டு செல்லும் பரப்புரை ஆகிவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாள்களுக்கு முன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக திமுகவினரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவாரூருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் பரப்புரை மேற்கொண்டார். திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட சன்னநிதி தெருவில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர், உறுப்பினர் சேர்க்கையிலும் ஈடுபட்டார்.
அப்போது வீட்டில் இருப்பவர்கள் அவருக்கு தேநீர் வழங்கியும், சால்வைகள் அணிவித்தும், அவருடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட செயலர் பூண்டி கே.கலைவாணன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.