"பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது" - இபிஎஸ் கண்டனம்!
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"திமுக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால், அஜாக்கிரதையால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களோடு, கொலை, கொள்ளை போன்ற கொடுஞ்செயல்களும் வரிசை கட்டி நிற்கின்றன.
- கிருஷ்ணகிரியில் 13 வயது அரசுப் பள்ளி மாணவியை மூன்று ஆசிரியர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு!
- கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே, பள்ளி விடுதியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணம்!
- மணப்பாறை தனியார் பள்ளியில் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!
- வேலூரில், ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கீழே தள்ளிவிட்ட கொடுரம்!
- வேலூரில், இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து, 6 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!
- தமிழகக் காவல் துறையின் உயர் பதவியில் உள்ள பெண் ADGP-யே, தனது உயிருக்கு பாதுகாப்பில்லை என புகார்!
- கள்ளக்குறிச்சியில் பெண் VAO மீது சாணி அடித்து தாக்குதல்!
- சிவகங்கையில், காவல் நிலையத்தில் புகுந்து பெண் SI மீது தாக்குதல்!
- அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு வன்கொடுமை 'யார் அந்த சார்?' உண்மையான, பின்புலம் மறைந்துள்ள குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்குப் பதில், பத்திரிகையாளர், காவல் துறை என்று தடம் மாறும் விசாரணை!
- கிழக்கு கடற்கரை சாலையில், நள்ளிரவில் பெண்கள் சென்ற காரை, காரில் துரத்தி அச்சுறுத்தியவர்கள் மற்றும் இதுகுறித்து துப்பு துலக்க வேண்டிய காவல் அதிகாரி, இரண்டு வெவ்வேறான பேட்டிகள் அளிப்பதும்; தொடர்ந்து கைது செய்யப்பட்ட குற்றவாளி மற்றும் திமுக நிர்வாகிகளின் பேட்டிகள்! உண்மையில் குற்ற வழக்கு விசாரணை நடைபெறுகிறதா? என்று காவல் துறைதான் விளக்க வேண்டும்!
- பெண் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை, உயர் பதவியில் உள்ள பெண் காவல் அதிகாரி உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறியுள்ள தமிழ்நாடு, கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறும் காவல் துறை!
- கோவை மத்திய சிறையில் கைதி தனது உயிருக்கு ஆபத்து என்று வீடியோ வெளியீடு!
- புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்திற்கே இன்னும் முழுமையான முடிவு எட்டப்படாத நிலையில், திருச்சி, ஸ்ரீரங்கம் கோட்டத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் கலப்பு செய்திகள் வெளிவருகின்றன!
- திமுக ஆட்சியில், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி என்று இருமுறை கள்ளச் சாராய மரணங்கள் நடைபெற்றும், கள்ளச் சாராய விற்பனை தொடர்வது வாடிக்கையாக உள்ளது!
தொடரும் குற்றச் சம்பவங்கள் பற்றிய எனது இந்த அறிக்கைக்கும், சட்ட நடவடிக்கை எடுக்காமல், யாரையாவது விட்டு அறிக்கை வெளியிடுவார். அந்த காலத்தில் மன்னன் நகர்வலம் போவதுபோல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் நகர்வலம் போக ஆரம்பித்துள்ளார்.
இரு நாட்களுக்கு முன்பு திருநெல்வேலியில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து, தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை கொடுப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த சமயத்தில், அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க மனமில்லாத முதலமைச்சரின் செய்கை கண்டனத்திற்குரியது!
இத்தகைய திமுக ஆட்சியில், விவசாயிகள், நெசவாளர்கள், வியாபாரிகள், தொழில் துறையினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என, அனைத்துத் தரப்பு மக்களும், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், இந்த ஆட்சியை வீழ்த்த உறுதி பூண்டுள்ளனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியாத முதலமைச்சருக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், இனியாவது சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.