தமிழக அரசின் டிஜிபி பெயர் பட்டியலை விரைந்து பரிசீலிக்க வேண்டும் - யு.பி.எஸ்.சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
தமிழக காவல்துறை தலைவராக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமனை தமிழ் நாடு அரசு நியமிதது. தமிழ்நாடு காவல்துறை டிஜிபி நியமனத்தில் விதிமீறல் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி பீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பை சேர்ந்த ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
வழக்கின் போது, தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டது ஏன் ? என தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதகி, காவல்துறை டிஜிபி பதவிக்கு தன்னுடைய பெயரையும் பரிந்துரைக்க வேண்டும் என ஒரு காவல் அதிகாரி மத்திய நிர்வாக தீர்ப்பாயம் முன்பு வழக்கு தொடுத்துள்ளார் அதனால் தான் வழக்கமான டிஜிபியை நியமனம் செய்ய முடியாத நிலையில் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டார் என தெரிவித்தார்
அப்போது குறுகிட்ட தலைமை நீதிபதி, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியின் மனுக்களை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது. எனவே காவல்துறை டி.ஜி.பி நியமன விவகாரத்தில், தமிழக அரசு அனுப்பி உள்ள பெயர் பட்டியலை யு.பி.எஸ்.சி விரைவாக பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். யு.பி.எஸ்.சியிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் பேரில், தமிழ்நாடு அரசு வழக்கமான டி.ஜி.பியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
அப்போது மனுதாரர் தரப்பில் டிஜிபியை நியமனம் செய்வது தொடர்பாக ஒரு கால வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்
அதற்கு தலைமை நீதிபதி டிஜிபி நியமன விவகாரத்தில் யு.பி.எஸ்.சி.க்கு கால வரம்பை நிர்ணயம் செய்து உத்தரவிட முடியாது,ஆனால் டிஜிபி நியமனம் தொடர்பான பெயர் பட்டியலை இறுதி செய்து விரைந்து தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுமென UPSCக்கு உத்தரவிடுவதாக தெரிவித்தனர்.