For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு... உச்ச நீதிமன்றத்தின் முழு தீர்ப்பும் இணையத்தில் வெளியானது!

ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முழு தீர்ப்பும் இணையத்தில் வெளியானது.
08:46 AM Apr 12, 2025 IST | Web Editor
ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு    உச்ச நீதிமன்றத்தின் முழு தீர்ப்பும் இணையத்தில் வெளியானது
Advertisement

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே,  தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

Advertisement

இந்த வழக்கில் நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 8ம் தேதி தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு சாதாகமாக வந்தது. அதன்படி, ஆளுநர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. தனது சிறப்பு அதிகாரம் 142ஐ பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. இதன் 415 பக்க தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்ற இணையதள பக்கத்தில் வெளியாகியுள்ளது.

வாழ்க்கையில் நான் பலமுறை தோல்விகளை சந்தித்துள்ளேன்' - ஆளுநர் ஆர்.என்.ரவி - News7  Tamil

இந்த வழக்கில் நீதிபதிகள் தெரிவித்ததாவது,

"சட்டமன்றத்தால் மீண்டும் மறுநிறைவேற்றம் செய்யப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் செயல் அரசியல் சாசனபிரிவு 200ஐ மீறியது. அவ்வாறு மறுநிறைவேற்றம் செய்யப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசு தலைவர் முடிவுக்காக அனுப்ப அரசியலமைப்பு பிரிவு 200 இடமளிக்கவில்லை என்பதால் ஆளுநரின் அந்த முடிவு சட்டத்துக்கு புறம்பானது. எனவே அதனை ரத்து செய்கிறோம்

ஆளுநரால் அரசியலமைப்பு பிரிவு 200ன் கீழ் வழங்கப்பட்டுள்ள நிவாரணத்துக்கு மாறாக அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் ஏதேனும் எதிர் முடிவுகளை எடுத்திருந்தால் அந்த முடிவுகளையும் ரத்து செய்கிறோம். மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் மறுநிறைவேற்றம் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிய மசோதாக்கள் மீதான ஒப்புதலை நீண்ட காலம் நிறுத்தி வைத்ததன் மூலம், தன்னுடைய பணியை செய்யாமல், உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்புக்கு அவமரியாதையை தமிழ்நாடு ஆளுநர் ஏற்படுத்தியுள்ளார்.

மசோதாக்கள் மீதான ஒப்புதல் வழங்குவதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பஞ்சாப் வழக்கில் உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பை மதிக்காமலும், அவர் கடமையை நிறைவேற்றுவதை விட அவருக்கு பெரிதாக தோன்றிய பிற காரணங்கள் அடிப்படையில் செயல்பட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநரின் இந்த செயலால், உச்சநீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான அரசியல் சாசன பிரிவு 142ன் பயன்படுத்த வேண்டியயை தவிர வேறு வழியில்லை என்பதால், அரசியல் சாசன பிரிவு 142ஐ பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குகிறோம்.

ஆளுநர் பதவியை எந்த வகையிலும் தாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மரபுகளுக்கு உரிய மரியாதை கொடுத்து ஆளுநர் செயல்பட வேண்டும். சட்டமன்றம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மூலம் வெளிப்படுத்தப்படும் மக்களின் விருப்பத்தை ஆளுநர் என்பவர் மதிப்பளித்து செயல்பட வேண்டும்.

ஆளுநர் #RNRavi-ஐ நீக்கக் கோரிய மனு தள்ளுபடி... உச்சநீதிமன்றம் அதிரடி! - News7  Tamil

ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கு ஒரு நண்பனாக, ஒரு தத்துவவாதியாக மற்றும் ஒரு வழிகாட்டியாக தனது பங்கை அரசியல் நலன் கருதாமல், அவர் எடுத்துக்கொண்ட அரசியலமைப்பு உறுதிமொழியின் படி செயல்படுத்த வேண்டும். கருத்து வேறுபாடுகளால் எழும் மோதல்கள் காலத்தில், தன்னுடைய ஞானத்தால் அரசின் செயல்பாட்டுக்கு உந்துகோலாக இருந்து செயல்பட்டு ஒரு முன்னோடியாக இருக்க வேண்டுமே தவிர அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்க கூடாது. மேலும் அரசின் இயக்கத்துக்கு தடையாக இருக்கக்கூடாது.

ஆளுநரின் செயல்பாடுகள் அனைத்தும் தான் வகிக்கும் அரசியலமைப்பு பதவியின் கண்ணியத்தை மனதில் கொண்டதாக மட்டுமே இருக்க வேண்டும். ஆளுநர் பதவி பிரமாணத்தின்போது, அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சியை பாதுகாக்கவும், மாநில மக்களுக்கு சேவை மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்காக தனது பணிகளை சிறப்பாகவும், அர்ப்பணிப்புடனும் செய்யவேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார். எனவே, ஆளுநரின் அனைத்து செயல்பாடுகளும் அவரது சத்தியப் பிரமாணத்திற்கு உண்மையாகவும், அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள கடைமையை நிறைவேற்றுவதும் கட்டாயமாகும்.

ஒரு மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவராக, மாநில மக்களின் விருப்பத்திற்கும் நலனுக்கும் முன்னுரிமை அளித்து, மாநில அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது. ஏனெனில், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஆளுநர் பொறுப்புக்கு உள்ள அதிகாரத்தால், அவரின் செயல்பாட்டால் மாநில மக்களுக்கு ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டே, ஆளுநர் பொறுப்பேற்கும் பொது செய்யப்படும் சத்தியப்பிரமாணம் மக்களின் சேவையே முக்கியம் என்பதை தெளிவுபடுத்துகிறது.

முதலமைச்சர் எனக்கெதிராக மக்களை வழிநடத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது” -  ஆளுநர் ஆர்.என். ரவி! - News7 Tamil

ஜனநாயக நடைமுறையில் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மாநில சட்டமன்றத்தின் விருப்பத்திற்கு முரணாக ஆளுநர் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர் எடுத்துக் கொண்ட அரசியல் சாசன சத்திய பிரமாணத்திற்கு எதிரானதாகும். உயர் பதவிகளில் அரசியலமைப்பு பொறுப்புகளில் இருப்பவர்கள் அரசியலமைப்பின் மதிப்பீடுகளின் அடிப்படையில் வழிநடக்க வேண்டுமே தவிர அரசியல் விருப்பத்தின்படி நடக்கக்கூடாது

அரசியலமைப்பின் மதிப்புகள், இந்திய மக்களால் மிகவும் போற்றப்படும் நமது முன்னோர்களின் பல ஆண்டு போராட்டம் மற்றும் தியாகத்தால் நமக்கு கிடைத்தவை. எனவே, அரசியல் சாசன பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவரும் முடிவுகள் எடுக்கும்போது அது தற்காலிகமான அரசியல் காரணங்களுக்கு அடிபணிந்த நடவடிக்கையாக இருக்கக்கூடாது. மாறாக அரசியலமைப்பின் விழுமியங்களின் படியான நடவடிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும், அரசியலமைப்பு விழுமியங்களின் மூலமாக தாங்கள் வழிநடக்க வேண்டும்.

எனவே, ஆளுநரும், மாநில அரசும் இணைந்து, மக்களின் நலன்களையும் நல்வாழ்வையும் முதன்மையாகக் கொண்டு இணக்கமாகச் செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்" என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்தத் தீர்ப்பின் நகலை ஒவ்வொரு உயர்நீதிமன்றங்களுக்கும், அனைத்து மாநில ஆளுநர்களின் முதன்மைச் செயலாளர்களுக்கும் அனுப்பவும் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags :
Advertisement