ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு - பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆளுநரின் செயலாளர், மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த அக்டோபர் 31-ம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருப்பதாக கூறி, ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு சபை அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்துள்ளார். சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், முகுல் ரோத்தஹி, அபிஷேக் சிங்வி ஆஜராகினர். அப்போது அவர்கள் கூறியதாவது:
”கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அதே போல அரசு உத்தரவுகளும் கையெழுத்திடாமல் ஆளுநரிடம் கிடப்பில் உள்ளன. அதே போல சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான கோப்புகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 2020-ம் ஆண்டு முதல் மசோதாக்கள் கிடப்பில் இருக்கிறது. பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க ஆளுநர் மறுப்பு தெரிவிக்கிறார்.
கோப்புகளை கிடப்பில் போட்டு வைத்து அரசாங்கத்தின் செயல்பாடுகளை முடக்கி வைக்கிறார். As Soon As Possible என்ற வாக்கியத்தை தமிழ்நாடு ஆளுநர் தவறாக புரிந்து கொண்டு தவறாக செயல்படுகிறார். மேலும் அரசு பணிகளில் 14 முக்கிய பணிகளுக்கான காலி பணியிடங்களில் 10 பணியிடங்களை நிரப்ப அனுமதிக்காமல் ஆளுநர் கோப்புகளை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்." என வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:
”தமிழ்நாடு சட்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் 12ஐ ஆளுநர் கிடப்பில் போட்டு உள்ளார் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதே போல அரசு ஆணைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதனால். பல்வேறு நிர்வாக சிக்கல் எழுந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
அதேபோல ஊழல் நடவடிக்கை தொடர்பான 4 கோப்புகளும் அனுமதி கொடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மசோதாக்களில் குறைபாடு இருந்தால் அதனை திரும்ப அனுப்பலாம். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த பதிலும் கூறாமல் ஆளுநர் உள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கு முக்கியமானது.” என தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஆளுநரின் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் வழங்கியதோடு, இந்த வழக்கை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.