For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு - நாளை தீர்ப்பு!

03:01 PM Nov 27, 2023 IST | Web Editor
அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு   நாளை தீர்ப்பு
Advertisement

தமிழ்நாட்டை சேர்ந்த 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய வழக்கில் நாளை தீர்ப்பளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணலை அள்ளி விற்பனை செய்ததாகவும்,  மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி ஒரே நேரத்தில் 34 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.  2 நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள்,  ரூ.12.82 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனையை தொடர்ந்து 10 மாவட்ட ஆட்சியர்கள்,  நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா,  ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.  இந்த சம்மனை தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜரானார்.

இந்த விவகாரத்தில்,  மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து,  தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இதனைத் தொடர்ந்து,  இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர்,  சுந்தர் மோகன் அமர்வில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் நவம்பர் 27-ம் தேதி இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தனர்.

அதன்படி இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பாக, ”சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது.  அமலாக்கத் துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது.  பாஜக ஆளும் மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அமலாக்கத்துறை ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமாக செயல்படுகிறது.

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.  கனிமவள குற்றங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க முடியாது.  எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை அமலாக்கத் துறையும் மறுக்கவில்லை. குவாரி உரிமைதாரர் தவறுக்கு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியுமா? யூகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியாது.” என வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

Tags :
Advertisement