Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஏழை மக்களின் மேம்பாட்டுக்காக பல திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை பாராட்டுக்குறியது” - உயர்நீதிமன்ற மதுரை கிளை!

08:22 PM Jul 22, 2024 IST | Web Editor
Advertisement

ஆசிரியர் பணியின் முதன்மை கடமை மாணவர்களுக்கு கற்பிப்பது எனவும், மடிக்கணினி திருட்டு வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியர்களை பலிகடா ஆக்குவது நியாயமற்றது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

Advertisement

தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி, மதுரையை சேர்ந்த கலைச்செல்வி ஆகியோர் அரசு தலைமை ஆசிரியர்களாக பணியாற்றினர். ஆனால், தங்களது பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அரசு லேப்டாப்கள் திருடு போன வழக்கு நிலுவையில் உள்ளதால், இருவரையும் ஓய்வு பெற அனுமதிக்கப்படவில்லை. மேலும், அவர்களுக்குரிய எந்தவித பணப்பலன்களும் கிடைக்கவில்லை. இதனால் தங்களை ஓய்வு பெற அனுமதித்து, ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்குமாறு உத்தரவிடக் கோரி தனித்தனியே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தஞ்சை மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “தமிழ்நாடு முழுவதும் இதுவரை 140 பள்ளிகளில் லேப்டாப் திருடுபோனதாக புகார் கொடுக்கப்பட்டு காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் திருடுபோன நபர்களை கண்டறியவில்லை. வழக்கு முடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் 59 தலைமையாசிரியர்கள் மீதான புகாரில் அவர்களே பணம் செலுத்தியுள்ளனர்” என வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, “அரசு பள்ளி, கல்லூர்ரி மாணவர்கள் கணினி திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசு பல கோடிகளை செலவழித்து வருகிறது. மடிக்கணினி திருட்டு என்பது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இவற்றை செயல்படுத்த நீதிமன்றம் குறுக்கே வராது.

பெரும்பாலான பள்ளிகள் பாதுகாப்பான நிலையில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. தலைமையாசிரியர்களுக்கு சில நிர்வாகப் பொறுப்புகள் இருந்தாலும், அவர்களின் முதன்மை கடமை மாணவர்களுக்கு ஆசிரியராகக் கற்பிப்பதுதான். ஆசிரியர்களின் சேவையை வேறு எந்த சேவையோடும் யாரும் ஒப்பிட முடியாது. அவ்வாறு இருக்கும்போது மடிக்கணினி திருட்டு வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியர்களை பலிகடா ஆக்குவது நியாயமற்றது.

மடிக்கணினி திருட்டு போன விவகாரத்தில் காவல் நிலையத்தில் அவர்களே புகார் அளிப்பது, வழக்கை தொடர்ந்து கண்காணிப்பது போன்ற பணிகளால், ஏழை மாணவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். சாதாரண மனிதர்களை போல தலைமை ஆசிரியர்களை கல்வித்துறை நடத்துவதை ஏற்க முடியாது. இது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, போலீசாரின் பாதுகாப்பில் மடிக்கணினிகளை வைத்து மாணவர்களிடம் ஒப்படைக்கலாம்.

இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். திருடப்பட்ட மடிக்கணினிகளை கண்டறிய அறிவியல்பூர்வமான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. இதுபோன்ற வழக்குகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்த காவல்துறைக்கு அரசு அறிவுறுத்த வேண்டும். எனவே தலைமை ஆசிரியர்களை கற்பிக்கும் பணி மற்றும் பள்ளி நிர்வாகத்துடன் தொடர்பு இல்லாத பணிகளில் ஈடுபட செய்யக்கூடாது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்துக்காக விரிவான நடைமுறை/வழிமுறைகளை மாநில அரசு வகுக்க வேண்டும். மடிக்கணினி திருட்டு வழக்கை நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி விசாரிப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மனுதாரர்களை ஓய்வு பெற அனுமதித்து, அவர்களின் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்” இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags :
DMKHighCourtlaptopMaduraiNews7Tamilnews7TamilUpdatesTamilNaduTN Govt
Advertisement
Next Article