For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பெண் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து புதிய சகாப்தத்தை உருவாக்கும் தமிழ்நாடு அரசு” - சிங்கப்பூர் இதழ் புகழாரம்!

02:00 PM Sep 10, 2024 IST | Web Editor
“பெண் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து புதிய சகாப்தத்தை உருவாக்கும் தமிழ்நாடு அரசு”   சிங்கப்பூர் இதழ் புகழாரம்
Advertisement

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்காக ரூ.706 கோடி செலவில் குடியிருப்பு விடுதி கட்டிய தமிழ்நாடு அரசுக்கு சிங்கப்பூர் இதழான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளது. நாட்டிலேயே தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்காக மாநில அரசால் உருவாக்கப்பட்ட முதல் விடுதி இது என அந்த இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆக. 19-ம் தேதி இந்த விடுதியை திறந்து வைத்தார். ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் 18,720 பெண் பணியாளர்கள் பயன் பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து ஃபாக்ஸ்கான் தலைவர் யாங் லீயுவும் திறந்து வைத்தார். விழாவில் பேசிய யாங் லீயு, “இந்த வளாகம் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பணிபுரிய வரும் பெண்களுக்கு அவர்களது வீடாக இருக்கும்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பெண் ஊழியர்களுக்காக விடுதி கட்டிக் கொடுத்த தமிழ்நாடு அரசின் செயலுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதழ் பாராட்டு தெரிவித்து செய்தியாக வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இதழின், இந்தியாவுக்கான செய்தியாளர் ரோகிணி மோகன் எழுதிருப்பதாவது:

“தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சிப்காட் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருவதுடன், அங்கு பணிபுரிபவர்கள் தங்கும் வகையில் விடுதி வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், காஞ்சிபுரம் வல்லம் வடகாலில் சிப்காட் நிறுவனம் மூலம் ரூ.706 கோடி மதிப்பில் தொழிற்சாலை பெண் பணியாளர்கள் தங்கி பணிபுரியும் வகையில் அடுக்குமாடி குடியிருப்பு விடுதி கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 13 தொகுதிகளாக, 10 மாடிகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் ஒரு தொகுதியில் மொத்தம் 240 அறைகள் இருக்கும். மொத்தமுள்ள 13 தொகுதிகளில் மொத்தம் 3120 அறைகள் உள்ளன. டார்மெட்ரி முறையில் ஒவ்வொரு அறையிலும் 6 பேர் தங்கும் வகையில் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதியின் முதல் தளத்திலும் 4000 பேர் அமரும் வகையில் உணவு அருந்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, 1170 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், சோலார் வாட்டர் ஹீட்டர், கொசு வலை, விளையாட்டு அரங்கங்கள், மழைநீர் சேகரிப்பு வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு வசதி, திடக்கழிவு மேலாண்மை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

ஜவுளி மற்றும் ஆடைத் தொழிற்சாலைகளைத் தாண்டி, குறிப்பாக எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பெண்கள் இப்போது குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றனர். இந்தியாவில் உற்பத்தித் துறையில் சுமார் 16 லட்சம் பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 42% பேர் அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். அந்த வகையில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் 41,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 35,000 பேர் பெண்கள். ஃபாக்ஸ்கான் நிறுவனம் போல உலகளாவிய உற்பத்தியாளர்களான பெகாட்ரான் மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களிலும் பெண்கள் அதிகம் பணிபுரிகின்றனர்.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் ஐபோன்களுக்கு உதிரி பாகங்களை பொருத்தும் பணியை மேற்கொண்டு வரும் பெரிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் முதலீடு செய்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை செய்ய ஆர்வமாக உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு 2 ஆலைகள் உள்ளன. இத்தகைய சூழலில் தான் பெண் பணியாளர்கள் தங்க வசதியாக அடுக்கு மாடி குடியிருப்புகளாக ஹாஸ்டல்கள் திறக்கப்பட்டுள்ளன.

சீனாவுக்கு வெளியே ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு அதிக பணியாளர்கள் உள்ள நாடு இந்தியா. அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் தான் ஃபாக்ஸ்கான் நிறுவனம் அதிக பணியாளர்களைக் கொண்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்பகுதிகள், பாலின சமத்துவம், சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பல தசாப்தங்களாக கட்டாய கல்வி மற்றும் பொது சுகாதாரத்தில் அரசு தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் திறமையான, அதிகாரம் பெற்ற இளம் பெண்களின் தலைமுறையை தமிழ்நாடு உருவாக்கியுள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன”

இவ்வாறு அந்த செய்தியில் செய்தியாளர் ரோகிணி மோகன் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரின் மெரினா பே சாண்ட்ஸ் கட்டடத்தின் பாதி அளவு அதாவது 8.1 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இந்த வளாகம், ஒரு தனியார் நிறுவனத்திற்காக மாநில அரசாங்கத்தால் கட்டப்பட்ட மிகப்பெரிய அளவிலான இந்தியாவின் முதல் குடியிருப்பு வளாகம் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வளர்ந்து வரும் மின்சார வாகன (EV) மையமான ஓசூரில், தமிழ்நாடு அரசும், இந்திய நிறுவனமான டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் இணைந்து 6,300 பணியாளர்களுக்கு வீடுகளை கட்டி வருகின்றன. சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் செய்யாறு காலணி உற்பத்தி மையத்திலும் 800 முதல் 2,000 தொழிலாளர்கள் தங்குவதற்கான வீட்டுத் திட்டங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி சிங்கப்பூர் இதழுக்கு அளித்த பேட்டியில், "இத்தகைய வீடுகள், பணியாளர்களை நீண்ட காலத்திற்கு தக்க வைத்தல், செயல்திறனை மேம்படுத்துதல், போக்குவரத்து செலவுகளைக் குறைத்தல் மற்றும் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களை ஈர்ப்பது போன்ற பல நோக்கங்களுக்கு உதவுகிறது" என தெரிவித்துள்ளார்.

நகர்ப்பகுதிகளில் பணியாற்றும் மகளிருக்காக தோழி விடுதிகள் பிரபலமடைந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் செயலை பாராட்டி சிங்கப்பூர் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது…

Tags :
Advertisement