"ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தர தமிழ்நாடு அரசு மறுப்பு" - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை? இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு? மற்றும் புதிய வீடுகள் கட்டுவதற்கு தேவையான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதா? என இன்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "பிரதமர் நரேந்திர மோடியை தமிழக மக்கள் பாராட்டி விடுவார்கள் என்பதற்காகவே தமிழக அரசு பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவதை மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள். ஆனால் தமிழ்நாடு அரசு மக்களுக்கு அநீதி இழைப்பதாகவும், வீடுகளை கட்டித் தரவும் அதற்கு தேவையான நிதியை வழங்கவும் மத்திய அரசு தயாராக இருந்தும் அதனை தமிழக அரசு மறுப்பதாக குற்றம்சாட்டினார்.
எனவே தமிழ்நாடு அரசை கைகூப்பி கேட்பதாகவும் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டி தருவதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்குவதோடு அதற்குத் தேவையான ஆய்வை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.