தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்: சிறந்த படம், கதாசிரியர் உள்ளிட்ட விருதுகளை குவித்த ‘தனி ஒருவன்’ திரைப்படம்!
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ‘தனி ஒருவன்’ திரைப்படத்துக்கு சிறந்த படத்துக்கான முதல் பரிசு மற்றும் கதையாசிரியர் விருது தனி ஒருவன் படத்திற்காக மோகன் ராஜாவிற்கும் வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை (மார்ச் 6) மாலை 6 மணிக்கு சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெறவுள்ளது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவுக்கு தலைமை வகித்து விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்க உள்ளார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். விழாவில் பரிசு பெறும் 2015-ம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்கள் விவரம் பின்வருமாறு:
சிறந்த படத்திற்கான முதல் பரிசு ‘தனி ஒருவன்’ திரைப்படத்திற்கும், இரண்டாம் பரிசு ‘பசங்க 2’ திரைப்படத்திற்கும், மூன்றாம் பரிசு ‘பிரபா’ திரைப்படத்திற்கும், சிறந்த படம் சிறப்புப் பரிசு ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்கும், பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்திரிக்கும் படம் (சிறப்புப் பரிசு) ‘36 வயதினிலே’ திரைப்படத்திற்கும் வழங்கப்படவுள்ளது. சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது ‘பசங்க 2’ படத்திற்காக மாஸ்டர் நிஷேஸ், பேபி வைஷ்ணவி ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
2015ம் ஆண்டின் சிறந்த படம் - தனி ஒருவன்https://t.co/WciCN2SQmv | #Bestfilm | #Thanioruvan | #Jayamravi | #Nayanthara | #MohanRaja | #TamilnaduGovtAwards | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/JfQGKDKxXR
— News7 Tamil (@news7tamil) March 4, 2024
அதேபோல் சிறந்த கதையாசிரியர் விருது மோகன் ராஜாவிற்கும் (தனி ஒருவன்), சிறந்த ஒளிப்பதிவாளர் விருது ராம்ஜி(தனி ஒருவன்) க்கும், சிறந்த ஒலிப்பதிவாளர் விருது ஏ.எல்.துக்காராம், ஜெ.மஹேச்வரன் (தாக்கதாக்க) ஆகிய இருவருக்கும், சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) விருது கோபி கிருஷ்ணாவிற்கும் (தனி ஒருவன்), சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட்டைரக்டர்) விருது பிரபாகரன் (பசங்க 2) ஆகியோருக்கும் வழங்கப்படவுள்ளது.
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருது ரமேஷ் (உத்தம வில்லன்), சிறந்த நடன ஆசிரியர் விருது பிருந்தாவிற்கும் (தனி ஒருவன்), சிறந்த ஒப்பனைக் கலைஞர் விருது சபரி கிரீஷன் (36 வயதினிலே/ இறுதிச்சுற்று), சிறந்த தையற் கலைஞர் விருது வாசுகி பாஸ்கர் (மாயா) ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
விருது வழங்கும் விழாவில், மொத்தம் 39 விருதாளர்களுக்குக் காசோலையும், விருதாளர்களின் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.