அரபிக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும், இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே இன்று (அக்.18) தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 24ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது மேற்கு வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.