ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!
கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் "தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா" நிறைவேற்றப்பட்டது.
இம்மசோதா தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும், இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி குழுவில் நிதித்துறைச் செயலாளரை உறுப்பினர்களில் ஒருவராக நியமிப்பதற்கு ஏதுவாக திருத்தம் செய்யப்பட்டது
தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த இந்த சட்டத் திருத்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார். ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது
அந்த மனுவில், ஆளுநரின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது என அறிவிக்க வேண்டும் என்றும் அதேவேளையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பி வைக்கும் மசோதாகளை தமிழ்நாடு ஆளுநர் கையாளும் விதம் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.