தமிழ்நாடு பட்ஜெட் - வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறை எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.
- ” 2024-25 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 49,278.73 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- வரிவசூலை மேம்படுத்துதல், வரி விகிதங்களை சீரமைத்தல் உள்ளிட்ட வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு, வருவாய்ப் பற்றாக்குறை 2025-26 ஆம் ஆண்டில் 18,098.03 கோடி ரூபாயாக குறையும் எனவும், அதன் தொடர்ச்சியாக 2026-27 ஆம் ஆண்டில் 5,966.67 கோடி ரூபாய் வருவாய் உபரிக்கு வழிவகுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கூடுதல் மூலதனச் செலவினத்திற்கு வழிவகை செய்யும்.
- 15வது நிதிக்குழு , மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப்பற்றாக்குறையின் விகிதத்தை 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டுகளுக்கு 3.0 சதவீதமாக மாநில அரசுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
- மேலும், மின்துறை சீர்திருத்தங்களை நிறைவேற்றும் பொருட்டு 2021-22 ஆம் ஆண்டு முதல் 2024-25 ஆம் ஆண்டு வரை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 0.5 சதவீதம் கூடுதலாக பெறுவதற்கு வழிவகை செய்துள்ளது.
- 2024-25 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப்பற்றாக்குறை விகிதம் 3.44 சதவீதமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
- வரும் ஆண்டுகளில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 2025-26 ஆம் ஆண்டில் 2.96 சதவீதம் மற்றும் 2026-27 ஆம் ஆண்டில் 290 சதவீதமாக இருக்கும். இது 15வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது.
மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதலும் திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப்பட்டுள்ளன. 2024 - 25 ஆம் ஆண்டில் மாநில அரசு 1,55,584.48 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. மேலும், 49,638.82 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 31.03.2025 அன்று நிலுவையில் உள்ள கடன் 8,33,361,80 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
2024-25 ஆம் ஆண்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் இது 26.41 சதவீதம் ஆகும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் விகிதம் 2025-26 ஆம் ஆண்டில் 25.75 சதவீதமாகவும், 2026-27 ஆம் ஆண்டில் 25 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 15-வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது. இவ்வாறு, சீரிய நிதி மேலாண்மையின் ஒரு பகுதியாக கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திறனை தக்கவைக்க அரசு திட்டமிட்டுள்ளது.” என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.