தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை - சிறுபான்மையினர் நலத் துறைக்கு ரூ.1.429 கோடி ஒதுக்கீடு!
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சிறுபான்மையினர் நலத் துறைக்கு 1.429 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.
“ சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் நீண்டகாலக் கோரிக்கையை நிரந்தரமாக ஏற்று, அவற்றுக்குரிய சான்றிதழ்களை வழங்குவதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவு, சிறுபான்மையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வழிபாட்டுத் தலங்களுக்கு முறையான அனுமதி பெறுவதிலும், வழிபாட்டுத் தலங்களில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதிலும் உள்ள இடர்பாடுகளைக் களைந்திட விரிவான வழிகாட்டு
நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
அதேபோல தேவாலயங்களைப் பழுதுபார்ப்பதற்கும், சீரமைப்பதற்கும் இந்த ஆண்டு பத்து கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். சென்னையில் சூளை, கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம், சிவகங்கை மாவட்டத்தில் இடைக்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேவாலயங்களைப் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்கு 1.429 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.” என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.