For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு கோரியது ரூ.37,907 கோடி! கிடைத்தது வெறும் ரூ.276 கோடி தான்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

07:40 PM Apr 27, 2024 IST | Web Editor
தமிழ்நாடு கோரியது ரூ 37 907 கோடி  கிடைத்தது வெறும் ரூ 276 கோடி தான் ”   முதலமைச்சர் மு க ஸ்டாலின் குற்றச்சாட்டு
Advertisement

தமிழ்நாடு கோரியது ரூ.37,907 கோடி, கிடைத்தது வெறும் ரூ.276 கோடி தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உண்டான மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வெள்ள பாதிப்பை உண்டாக்கியது. இந்த துயரில் இருந்து மக்கள் மீள்வதற்குள் டிசம்பர் 17, 18 தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளக் காடாக மாறியது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.6,000 நிவாரணம் வழங்கிய தமிழக அரசு, இரண்டு வெள்ள பாதிப்பு சேதங்களை சரி செய்ய 37,907 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசிடம் கோரியது. மத்திய குழு வெள்ள பாதிப்புகள் ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளித்தபோதும், தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இதனால், தமிழகத்தில் வெள்ள பாதிப்பின்போது வந்து பார்வையிடாத பிரதமர் மோடி, தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு மட்டும் அடிக்கடி தமிழ்நாடு வருகிறார் என்று திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குற்றம்சாட்டின.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக 2000 கோடியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இம்மாத தொடக்கத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த நிலையில் தற்போது தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக 276 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரண நிதியாக 3,454 வழங்கப்பட்டதும், தமிழகத்திற்கு குறைவாக வழங்கப்பட்டதும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X (ட்விட்டர்) தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய். ஆனால், மத்திய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார்.

Tags :
Advertisement