தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!
தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு 2018-ல் அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரம் திட்டம் முறையே செல்லாது என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அதிரடியாக இன்று தீர்ப்பளித்துள்ளது.
2018-ம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதியிட்ட தேர்தல் பத்திரத் திட்டத்தின்படி, தேர்தல் பத்திரங்களை இந்தியக் குடிமகனாக இருக்கும் நபர் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட ஒரு நிறுவப்பட்ட நிறுவனமும் வாங்கலாம். ஒரு நபர் தனியாகவோ அல்லது பிற நபர்களுடன் கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்க முடியும். இப்படி வாங்கும் தேர்தல் பத்திரங்களை அவர்களின் ஆதர்சன அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (43 இன் 1951) பிரிவு 29ஏ -இன் கீழ் பதிவு செய்யப்பட்ட, கடந்த பொதுத் தேர்தலில் மக்களவைக்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ மாநிலத்தின் மொத்த வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே, தேர்தல் பத்திரங்களைப் பெற தகுதியுடையவையாகும். தேர்தல் பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே தகுதியான அரசியல் கட்சியால் பணமாக்க முடியும்.
ஆனால் இந்த தேர்தல் பத்திர திட்டமானது வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது; அரசியல் கட்சிகளுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என அறியும் உரிமையை மறுக்கிறது என்பது உள்ளிட்ட பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இந்த தேர்தல் பத்திரம் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இன்று தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து அதிரடி தீர்ப்பளித்தது. மேலும், அரசை கேள்வி கேட்கிற உரிமை மக்களுக்கு உண்டு எனவும் உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தது.
உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின் சில முக்கிய அம்சங்கள்:
- தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது
- தேர்தல் பத்திரங்கள் திட்டங்கள் செல்லாது
- தேர்தல் பத்திரங்கள் வாக்காளர்களது உரிமையை பறிக்கிறது தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது
- தேர்தல் பத்திரங்கள் திட்டமானது தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கும் எதிரானது.
- தேர்தல் பத்திரங்கள் அரசியல் சாசனத்தின் 19(1)(a) -க்கு எதிரானது.
- தேர்தல் பத்திரங்கள் திட்டம் மட்டுமே கறுப்பு பணத்தை ஒழிக்க உதவாது.
- அரசை கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது X தள பதிவில் கூறியிருப்பதாவது:
தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று உச்சநீதிமன்றம் சரியாகவே கூறியுள்ளது. மேலும், இது வெளிப்படையான தேர்தல் செயல்முறை மற்றும் அமைப்பின் நேர்மையை உறுதி செய்யும், இந்தத் தீர்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கான ஜனநாயகத்தையும் சம நிலையையும் மீட்டெடுத்துள்ளது. அதோடு நீதித்துறை மீதான சாமானிய மக்களின் நம்பிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The Hon’ble Supreme Court has rightly held that the #ElectoralBonds are unconstitutional. This will ensure transparent electoral process and the integrity of the system. This judgement has restored the #democracy and level playing field for all political parties. It has also…
— M.K.Stalin (@mkstalin) February 15, 2024