தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரிசியல் மாற்றத்தை காணலாம் - பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம்
வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை காண முடியும் என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டன.
இந்த நிலையில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
"தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மோசமாக உள்ளது. இவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு பயப்படுவார்கள் என தெரியவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினரின் அராஜகத்தை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை. வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை காண முடியும்.
தமிழ்நாடு முழுவதும் 39 தொகுதிகளில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவதே பாஜக தொண்டர்களின் எண்ணம். மத்திய பிரதேசத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்பவர்களுக்கு எங்களது கூட்டணியில் இடமில்லை என்பது பாஜக தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. 2024-ம் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வரும்.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்பவர்கள் எங்களிடம் லேகியம் வாங்கி சாப்பிடுகிறார்கள்.
ஜனநாயகத்திற்கு வழிகாட்டியவர்கள் தமிழர்கள். சோழர்கள் அதை செய்தார்கள் என்பதற்கு உத்தரமேரூர் கல்வெட்டு சான்று. மக்களவைத் தேர்தலில் இருப்பது 2 அணி தான், அது பாரத பிரதமராக மோடி வேண்டுமா? வேண்டாமா?. மீண்டும் பிரதமராக மோடி ஆட்சிப் பொறுப்பில் அமருவது உறுதி. "
இவ்வாறு அவர் கூறினார்.