‘லட்டு பாவங்கள்’ - பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது தமிழ்நாடு பாஜக புகார்!
"லட்டு பாவங்கள்" என்ற பெயரில் வெளியான வீடியோவை நீக்கியிருந்தாலும், இந்துக்களின் உணர்வுகளை அவமதித்துள்ளதாக, பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது ஆந்திரப்பிரதேச டிஜிபியிடம் தமிழ்நாடு பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைப்பெற்றது. அப்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில், லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுதொடர்பான ட்ரோல் வீடியோக்களும், மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் பிரபல யூடியூபர்களான கோபி, சுதாகர் தங்களுடைய பரிதாபங்கள் சேனலில் “லட்டு பாவங்கள்” என்ற தலைப்பில் இந்த விவகாரத்தை கலாய்த்து வீடியோ வெளியிட்டனர். வீடியோ வெளியான சில மணிநேரங்களிலேயே இந்துக்களை அவமரியாதை செய்வதாகக் கூறி எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது.
உடனே வீடியோவை நீக்கி, விளக்கமும் அளித்தனர். “கடைசியாகப் பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை அதையும் மீறி சிலர் மணம் புண்பட்டிருப்பதால்.. அதற்கு வருத்தம் தெரிவித்துச் சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கி உள்ளோம்.. இது போல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்” எனக் கூறியிருந்தார்கள்.
இந்நிலையில் வீடியோ நீக்கியிருந்தாலும் அவை இந்துக்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் அமைந்ததாக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, ஆந்திரப் பிரதேச காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
"Ladoo Pavangal" என்ற தலைப்பிலான அவதூறு வீடியோவிற்கு, பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி, ஆந்திரப் பிரதேச டிஜிபியிடம் முறையான புகார் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளேன். அவர்கள் வீடியோவை நீக்கியிருந்தாலும், வீடியோ இந்துக்களின் உணர்வுகளை அவமதிப்பது மட்டுமல்லாமல், சமூகங்களுக்கு இடையே பகையை வளர்க்கவும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளைத் தூண்டும் விதமாகவும் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.