தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் : விசாரணைக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பேரிடமிருந்து சுமார் ரூ.4 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த பணம் திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடையது என தெரியவந்தது.
இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பாஜகவின் தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர்.
இந்நிலையில் எந்த காரணமும் தெரிவிக்காமல் சம்மன் அனுப்பியுள்ளதாகக் கூறி, அதனை ரத்து செய்யக்கோரி கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் பாஜகவின் பெயருக்கும், தனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின்போது, ‘சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது’ என கேசவ விநாயகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படாத போது இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.