#T20WorldCup: அரை இறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான் - வெளியேறியது ஆஸ்திரேலியா!
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின், கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றியைப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் அணியும், வங்கதேச அணியும் செயின்ட் வின்சென்ட்டில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதன் காரணமாக அதிரடியாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குர்பாஸ் மட்டும் தனி ஆளாக நின்று 43 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அவரைத் தொடர்ந்து நிலையாக எந்த ஒரு வீரரும் விளையாடாமல் அதிர்ச்சியளித்தனர். இதன் காரணமாக 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2-வது இன்னிங்ஸ் தொடங்கும் முன்பே பல கணித முறைகள் வகுக்கப்பட்டது. அதில் இந்த இலக்கை 12.1 ஓவர்களில் எட்டினால் வங்கதேச அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவார்கள் என்றும் 12.1 ஓவர்களை தாண்டி வங்கதேச அணி வெற்றி பெற்றார்கள் என்றால் ஆஸ்திரேலியா அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவார்கள் என்றும் போட்டியை வென்றால் ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு செல்வார்கள் என்றும் விறுவிறுப்பாகவே தொடங்கியது.
அதன்பிறகு வங்கதேச அணி பேட்டிங் களமிறங்கி விளையாடியது. தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடி வந்த வங்கதேச அணி விக்கெட்டுகளையும் இழந்து மோசமான நிலையில் இருந்தனர். மேலும், ரஷீத் கானின் அபாரமான பந்து வீச்சால் வங்கதேச அணி நிலை குழைந்து போனது. மேலும், மழை அவ்வப்போது குறிக்கிட்டதன் காரணமாக 1 ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கும் 114 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து 9 பந்துக்கு 9 ரன்கள் இருந்த நிலையில் 2 விக்கெட்டுகள் கையில் இருந்த நிலையில் அடுத்தடுத்து அந்த 2 விக்கெட்டையும் இழந்து வங்கதேச அணி 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரிலிருந்து வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, வரும் ஜூன் 27-ம் தேதி தென்னாபிரிக்கா அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் முதல் அரை இறுதி போட்டியிலும், அதே தினம் மாலை இந்தியா அணியும், இங்கிலாந்து அணியும் 2-ம் அரை இறுதி போட்டியிலும் விளையாடவுள்ளனர்.