டி20 உலக கோப்பை - நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி அபார வெற்றி!
டி20 உலகக் கோப்பை தொடரின் 7ஆவது போட்டியில் நேபாள அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வீழ்த்தியது.
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 7 வது லீக் ஆட்டத்தில் நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டி டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரைரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய நேபாள் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கடைசியாக 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நேபாளம் அணி 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் பௌடல் 35 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து கரண் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்து அணி தரப்பில் டிம் பிரிங்கிள் மற்றும் வான் பீக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வான் மிகீரன் மற்றும் பாஸ் டி லீட் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையடுத்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ் ஓடௌத் 48 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, விக்ரம்ஜித் சிங் 22 ரன்களும், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 14 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் நெதர்லாந்து அணி டி20 உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.