டி20 உலகக்கோப்பை: அயர்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி!
உலக கோப்பை தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாச, 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
டி20 உலகக் கோப்பை தொடரின் 8வது போட்டி இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையே நியூயார்க்கில் நடைபெற்றது. குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருக்கும் இரு அணிகளும், இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது முதல் போட்டியில் களமிறங்கின.
இந்திய அணி கடைசியாக விளையாடி 5 டி20 போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது. அயர்லாந்து அணி தனது கடைசி 5 டி20 போட்டியில் 3 வெற்றிகளை பெற்றிருக்கிறது. இந்த போட்டியில் சுமார் 18 மாதங்களுக்கு பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். அதேபோல் ஹார்திக் பாண்ட்யாவை சேர்ந்து நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த அயர்லாந்து ஓவரில் ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கரேத் டெலானி 26, ஜோஷ் லிட்டில் 14, கர்டிஸ் காம்பர் 12, லார்கன் டக்கர் 10 ரன்கள் எடுத்தனர். இவர்களை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள்.
இந்திய பவுலர்களில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் , ஐஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முகமது சிராஜ், அக்ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
எளிய இலக்கை விரட்டிய இந்தியா 12.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 46 பந்துகள் மீதமிருக்க, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 52, ரிஷப் பண்ட் 36 ரன்கள் அடித்தனர்.
ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய கோலி ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் தந்தார். அதேபோல் சூர்ய குமார் யாதவும் 2 ரன்னில் வெளியேறினார். அயர்லாந்துக்கு எதிராக தனது வெற்றி பயணத்தை இந்திய தொடர்ந்துள்ளது. அத்துடன் இது ரோகித்தின் 43வது டி20 சர்வதேச வெற்றியாக அமைந்துள்ளது. இதன் மூலம் அதிக டி20 போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை புரிந்துள்ளார்.