வெயிலின் தாக்கத்தால் த.வெ.க. மாநாட்டில் இருந்து வெளியேறிய தொண்டர்கள்!
மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு துவங்கியதும், ஒருபுறம் தொண்டர்கள் கூட்டம் தொடர்ந்து குவிந்து வந்தது. ஆனால், மறுபுறம் எதிர்பாராதவிதமாக விஜய்யைக் காண வந்த பல தொண்டர்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் கலைந்து செல்லத் தொடங்கினர்.
மதிய நேர வெயில் மிகக் கடுமையாக இருந்ததால், திறந்தவெளியில் நீண்ட நேரம் காத்திருப்பது பலருக்கு சவாலாக இருந்தது. அலைகடலென திரண்டிருந்த கூட்டத்தில், தலைவரைக் காண்பதற்காகப் பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்களில் சிலர், வெப்பம் காரணமாக நீர்ச்சத்து இழப்பு மற்றும் உடல்நலக் குறைபாடு போன்ற காரணங்களால் மாநாட்டுத் திடல் பகுதியை விட்டு வெளியேறினர்.
மாநாட்டு அரங்கில் போதுமான நிழல் வசதிகள் இல்லாதது, இந்தச் சூழலை மேலும் மோசமாக்கியது. கடுமையான வெயிலின் காரணமாக, பல தொண்டர்கள் அருகில் உள்ள கடைகள் அல்லது மர நிழல்களில் தஞ்சமடைந்தனர். ஒரு சில தொண்டர்கள், மருத்துவ முகாம்களை நாடினர்.
விஜய்யைக் காணும் ஆவலில் வந்திருந்தாலும், உடல்நலமே முக்கியம் என்பதால் அவர்கள் மாநாட்டை விட்டு வெளியேறினர். இது, வருங்கால அரசியல் நிகழ்வுகளில் தொண்டர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.