இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த SK..!
இசை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் இளையராஜா. இவர் தனது இசையால் பலரை கட்டிப்போட்டவர். மேலும் இவரது இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்று தான் சொல்லும் அளவிற்கு அனைத்து வயதினரும் இவரது பாடலை முணுமுணுத்து வருவார்கள்.
அன்னக்கிளி படம் மூலமாக அறிமுகமான இளையராஜா இன்றும் இசையின் மூலம் ராஜாங்கம் நடத்திக் கொண்டு இருக்கிறார். இவரின் முதல் படத்தில் இருந்தே இவரது பாடல்கள் சரித்திரமாகத் தொடங்கிவிட்டன. இவர் இதுவரை சுமார் 1500க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏராளமான மேடை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி இருக்கிறார். 10000க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.
இந்த நிலையில் இளையராஜாவின் முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற 8ஆம் தேதி (08.03.2025) நடைபெறவுள்ளது. இதனையொட்டி இளையராஜாவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று (மார்ச்.04) கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவலகத்திற்கு நேரில் சென்றார். அங்கு சிவகார்த்திகேயன், இளையராஜாவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், யாழ் ஒன்றை நினைவுப்பரிசாகவும் வழங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.