“பெண்களின் பாதுகாப்பை விரைவான நீதி உறுதி செய்யும்” - பிரதமர் #Modi பேச்சு!
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவாக நீதி வழங்குவது, பெண்களின் பாதுகாப்புக்கு அதிக உத்தரவாதம் அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவமனையில் 31 வயதுடைய பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 3 மற்றும் 4 வயதுடைய இரண்டு மழலைகள் அப்பள்ளியில் பணிபுரிந்த தூய்மைப் பணியாளரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த பாலியல் குற்றங்களை கண்டித்து போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் விரைவான நீதி பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் என பிரதமர் மோடி இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
இந்திய நீதித்துறைக்கான இரண்டு நாள் தேசிய மாநாட்டை டெல்லியில் இன்று தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:
“இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், குழந்தைகளின் பாதுகாப்பு என்பது சமூகத்தின் பெரும் கவலையாக உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து நீதி வழங்கப்பட்டால், மக்கள் பாதுகாப்பாக உணர்வார்கள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவாக நீதி வழங்குவது, பெண்களின் பாதுகாப்புக்கு அதிக உத்தரவாதம் அளிக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதற்கு கடுமையான சட்டங்கள் உள்ளன. விரைவான நீதியை உறுதிசெய்ய குற்றவியல் நீதி அமைப்புகளிடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதிசெய்ய வேண்டிய அவசியம் உள்ளது” எனப் பேசினார்.