"சூர்ய மூர்த்தி அதிமுகவைச் சேர்ந்தவர் அல்ல" - தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் பதில் மனு!
இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சி விவகாரம் தொடர்பாக சூர்யமூர்த்தி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்திருந்தார். இந்த மனுவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,
"சூர்ய மூர்த்தி அதிமுக கட்சியை சேர்ந்தவர் அல்ல. மேலும் அவர் தேர்தலில் வேறு கட்சியின் சார்பாக அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார். இவர் அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக மனு அளிக்கவோ, வழக்கு தொடுக்கவோ எந்த உரிமையும் கிடையாது. மேலும் பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்வு, உள்ளிட்ட உட்கட்சி விவகாரம் குறித்து எந்த விவகாரத்தையும் சூர்ய மூர்த்தி எழுப்ப முடியாது.
சூர்ய மூர்த்தி போன்ற கட்சிக்கு விரோதமானவர்கள் புறவயில் மூலம் தேர்தல் ஆணையத்தை அணுக முடியாது. உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஏதேனும் பிரச்னை இருப்பின் அதனை சிவில் நீதிமன்றத்தில் தான் எடுத்து வைக்க வேண்டுமே தவிர, உட்கட்சி விவகாரத்தில் தலையிட அதிகாரம் இல்லாத தேர்தல் ஆணையத்திடம் முறையிட முடியாது.
எனவே உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை, இந்த விவகாரம் தேர்தல் ஆணைய விசாரணை வரம்புக்குள்ளும் வராது. எனவே சூர்ய மூர்த்தி மனுக்களை மேற்கொண்டு எந்த விசாரணையும் இன்று நிராகரிக்க வேண்டும்"
இவ்வாறு விளக்க மனுவில் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.