#YouTube பார்த்து அறுவை சிகிச்சை… பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்! நடந்தது என்ன?
பீகார் மாநிலத்தில் மருத்துவர் யூடியூபை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததால் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ண குமார் (15). இவர் கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டிருக்கிறார். இதனால் சிறுவனின் பெற்றோர் சரன் நகரில் உள்ள கிளினிக்கில் சிறுவனை சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர் அஜித் குமார் முதலுதவி சிகிச்சை அளித்திருக்கிறார். பின்னர் சிறுவனுக்கு பித்தப்பையில் கல் உள்ளது என்றும் அதனால்தான் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது என்றும் அவர் கூறினார்.
பின்னர், அந்த மருத்துவர் பெற்றோரின் சம்மதம் இல்லாமலேயே சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ததாகவும் சிறுவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுவனின் உடல் நிலை மோசமடைந்தாக தெரிகிறது.
இதனால் பெற்றோர் சிறுவனை பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் போலி மருத்துவர் அஜித் குமாரை கைது செய்தனர். தொடர்ந்து போலுசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.