ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பு: சிபிஎம் வரவேற்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் ஆளுநர் ரவியின் இந்த செயலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கட்சித் தலைவர்கள், எம்பிக்கள் என பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாக அகிய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஎம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,
“மோடி அரசின் முகத்தில் அறையுங்கள்!
வரலாற்று சிறப்புமிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் நிறுத்தியது சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்ற உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
கேரளா மற்றும் பாஜக ஆளாத பிற மாநிலங்கள் மத்திய அரசின் உத்தரவின் பேரில் செயல்படும் ஆளுநர்களின் இதேபோன்ற சட்டவிரோத செயல்களை எதிர்கொண்டுள்ளன. இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் நிலைநிறுத்துகிறது.
திமுக அரசுக்கு வாழ்த்துக்கள்!” என குறிப்பிட்டுள்ளது.