For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காவிரி - வைகை - குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரிய கர்நாடக அரசின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
09:41 AM Jan 21, 2025 IST | Web Editor
காவிரி   வைகை   குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Advertisement

கடந்த 2020ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஆரம்பத்திலேயே கர்நாடக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் அம்மாநில அரசு சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தத் திட்டம் தொடர்பான சாதக, பாதகங்கள் குறித்த ஆவணங்களை இரண்டு மாநில அரசுகளும் தங்களுக்குள் வழங்கிக் கொள்வதுடன், அது சம்பந்தமான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உமாபதி மற்றும் குமணன், “இந்தத் திட்டத்தில் கர்நாடக அரசு முன்வைக்கும் எதிர்ப்பு, பொய்யான தகவல்கள் அடங்கியது மட்டுமல்லாமல், முகாந்திரமும் இல்லாதது. இது குறித்த கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று வாதங்களை முன் வைத்தனர்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் “இத்திட்டத்தால் கர்நாடகத்தின் நீர் தேவை பாதிக்கப்படும். எனவே இறுதி முடிவு எடுக்கப்படும் வரை திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், 'காவிரி - வைகை - குண்டலாறு இணைப்பு திட்ட விவகாரத்தில், மத்திய அரசு தரப்பில் இருந்து முதற்கட்ட அனுமதி கூட வழங்கப்படாத நிலையில் அதற்கு எவ்வாறு தடை விதிக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, “இந்த விவகாரத்தில் கர்நாடகத்தின் கோரிக்கை சாத்தியமில்லாதது. மேலும், வரைவுத் திட்டங்கள், அதன் சாதக பாதகங்களை விவரிக்கும் ஆவணங்களை இரு மாநில அரசுகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு அவற்றின் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றை நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் பதிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags :
Advertisement