தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் SIR நடத்த கோரிய வழக்கு - உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி இந்திய தேர்தல் ஆணையமானது, பீகாரில் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தம் நடத்தியது. ஆனால் அந்த தீவிர திருத்தத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது என்றும் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் 2026ம் ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ”2026ம் ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ள தமிழ்நாடு, அசாம் ,கேரளா மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். மேலும் நாடு முழுவதும் இதேபோன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள உத்தரவிடவேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.