திருநங்கைக்கு ஆசிரியர் பணி மறுப்பு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
திருநங்கை என்பதால் தன்னை பள்ளியில் இருந்து பணிநீக்கம் செய்ததாக ஆசிரியர் ஒருவர் தாக்கல் செய்த மனுவுக்கு உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர்கேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஜேன் கெளஷிக் எனும் 31 வயதான திருநங்கை, ஆசிரியராக பணியாற்றிய நிலையில், அவரது பாலினம் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் குஜராத்தில் உள்ள மற்றொரு பள்ளியில், தனது பாலினத்தை காரணம் காட்டி பணி மறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இது தொடர்பாக ஜேன் கெளஷிக் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேசம், குஜராத் மாநில அரசுகளும், மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியது.
"மனுதாரரின் பாலின அடையாளம் தெரிய வந்ததையடுத்து, உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத்தில் உள்ள இருவேறு தனியார் பள்ளிகளில் அவரது வேலை பறிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் இரண்டு வெவ்வேறு உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது என்று கூறுகிறார். எனவே இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு மற்றும் தொடர்புடைய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. 4 வாரங்களுக்குள் இதற்கு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.