‘Man Blowing Turha’ சின்னத்தை பயன்படுத்த சரத்பவார் கட்சிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!
‘Man Blowing Turha’ சின்னத்தை பயன்படுத்த சரத் பவார் கட்சிக்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்த சரத் பவார் பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். மகாராஷ்டிராவில் முக்கிய கட்சியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த ஆண்டு உள்கட்சி மோதல் வெடித்தது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், கட்சியை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசில் இணைந்து துணை முதலமைச்சர் ஆனார்.
இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவாரும், அஜித் பவாரும் உரிமை கொண்டாடி வந்தனர். இருதரப்பிலும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், 53 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 41 எம்.எல்.ஏ.க்கள் அஜித் பவாருக்கும், 12 பேர் சரத் பவாருக்கும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த மனு குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ தேர்தல் பிரச்சாரப் பொருட்களில் அஜித் பவார் கட்சியினர் பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் சரத்பவார் கட்சிக்கு ‘Man Blowing Turha’ சின்னத்தை அனைத்து தேர்தல்களுக்கு வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சின்னத்தை வேறு எந்த கட்சிகளுக்கும் வழங்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.