ஓய்வு பெற்ற நீதிபதிகளை தற்காலிக நீதிபதிகளாக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் பி.ஆர் கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை தற்காலிக நீதிபதிகள் அடிப்படையில் நியமிக்கலாம் என தெரிவித்துள்ளது.
கடந்த 2021 ஏப்ரல் மாதம், அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, 224A விதியின் கீழ் (உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க பயன்படும் சட்டவிதி) உயர் நீதிமன்றங்களுக்கு தற்காலிக நீதிபதிகளை நியமிப்பதற்கான வழிமுறைகளை வழங்கி இருந்தது. ஆனால் 2021ல் வழங்கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட சில நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மீண்டும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பான வழக்கை பரிசீலித்த உச்சநீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு, முந்தைய உத்தரவில் குறிப்பிட்ட சில மாற்றங்களோடு புதிய உத்தரவை வழங்கியுள்ளது.
அதன்படி, உயர்நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதிகளாக நியமிக்கப்படும் நீதிபதிகள் டிவிசன் பெஞ்ச் அமர்வில் அமர்ந்து வழக்குகளை விசாரிப்பார்கள் என தெரிவித்துள்ளது. ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் 2 முதல் 5 நீதிபதிகள் வரை தற்காலிக நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கலாம் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கையில் 10 சதவீதத்தை, தற்காலிக நீதிபதிகளின் எண்ணிக்கை மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
224A விதியை பயன்படுத்தியே உயர் நீதிமன்றங்களுக்கு தற்காலிக நீதிபதிகளை நியமிக்க வேண்டும் எனவும், நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் தற்போது 62 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் 18 லட்சம் வழக்குகள் கிரிமினல் வழக்குகளாகவும், 44 லட்சம் வழக்குகள் சிவில் வழக்குகளாகவும் நிலுவையில் உள்ளது.
எனவே நீண்ட காலம் வழக்குகள் நிலுவையில் இருப்பதை தவிர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலும் 2021 ஏப்ரல் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சில நிபந்தனைகளை தளர்த்துவதாக தெரிவித்தனர். மேலும், 2021ல் வழங்கப்பட்ட தீர்ப்பில் 61வது பத்தியில், தற்காலிக நீதிபதிகளை மட்டுமே கொண்ட டிவிசன் பெஞ்ச் அமைக்கப்படும் என்ற உத்தரவையும் நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.