தமிழ்நாடு அரசை விமர்சித்த விவகாரம் | "சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கில் #SupremeCourt அதிரடி!
தமிழ்நாடு அரசை விமர்சித்து பேசிய விவகாரத்தில் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் ஏன் மன்னிப்பு கேட்க கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
2022-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவரது இந்த பேச்சு அரசு மற்றும் முதலமைச்சரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்ததாகக் கூறி, அவருக்கு எதிராக 4 அவதூறு வழக்குகளை, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. தன் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பதிவு செய்யப்பட 4 வழக்குகளில், 2 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது.அதே நேரம், தொழிலாளர் சட்டம் குறித்தும், `420 அரசு' என சி.வி.சண்முகம் பேசியதற்காகவும் பதிவுசெய்யப்பட்ட 2 ழக்குகளை ரத்து செய்ய மறுத்து, விசாரணையை எதிர்கொள்ள நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கடந்த தீர்ப்பளித்தார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அதிமுக எம்பி. சி.வி.சண்முகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாடு மீனவர்கள் கைது விவகாரம் | வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் #MKStalin மீண்டும் கடிதம்!
அந்த மனுவில், "தான் நேரடியாக முதலமைச்சரை விமர்சிக்கவில்லை. தமிழ்நாடு அரசை மட்டுமே விமர்சித்ததுள்ளேன். அதில் தவறு ஏதும் இல்லை. தன்மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த அவதூறு வழக்குகளை அரசு பதிவு செய்துள்ளது. எனவே இரு வழக்குகளில் விசாரணை எதிர்கொள்ள உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து, தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.
இதனையேற்ற உச்ச நீதிமன்றம், சி.வி.சண்முகத்திற்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், "மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு எப்படி இவ்வாறு பேச முடிகிறது?. இவ்வளவு மோசமான ஒரு பேச்சுக்காக சி.வி.சண்முகம் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது?. முதலமைச்சரை விமர்சித்து அவதூறாக பேசிய வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். பொறுப்புடன் செயல்பட வேண்டும். நீங்கள் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம். அதனால், வழக்கை ரத்து செய்ய முடியாது. மேலும், இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது"
இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.