இந்தியா கூட்டணிக்கு ஆதரவு - முதலமைச்சரை நேரில் சந்தித்த மஜக தலைவர் தமிமுன் அன்சாரி அறிவிப்பு!
மக்களவைத் தேர்தலை வெறும் அரசியல் களமாக பார்க்கவில்லை எனவும், ஜனநாயகத்திற்கு பாசிசத்திற்கும் உள்ள போட்டியாக பார்ப்பதாகவும் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்தார். அப்போது அவர் வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவோம். முதலமைச்சரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளோம். சமூக நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டுமானால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்.
இந்த மக்களவைத் தேர்தலை வெறும் அரசியல் களமாக பார்க்கவில்லை, ஜனநாயகத்திற்கு பாசிசத்திற்கும் உள்ள போட்டியாக பார்க்கிறேன். அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியின் வேட்பாளர்களாக போட்டியிடும் திருமாளவன், ரவிக்குமார் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தேர்தல் நேரத்தில் முதன்மையான நோக்கம் ஜனநாயகத்தை பாதுகாப்பது தான். கடல் கொள்ளையர்களை வீழ்த்த வேண்டும். அதற்காக கட்டுமரத்தில் பயணம் செய்வதா? போர்க் கப்பலில் பயணம் செய்வதா? என்று யோசிக்க வேண்டும். போர்க்கப்பலில் பயணம் செய்தால் தான் கடல் கொள்ளையர்களை வீழ்த்த முடியும்”
இவ்வாறு மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.