For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் - பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை கொலை செய்த தாத்தா கைது!

03:07 PM Jun 17, 2024 IST | Web Editor
மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்   பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை கொலை செய்த தாத்தா கைது
Advertisement

சித்திரை மாதத்தில் பிறந்ததால் குடும்பத்திற்கு ஆகாது என்ற மூடநம்பிக்கையால் பிறந்து 38 நாட்களே ஆன தனது பேரனை கொலை செய்த தாத்தாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து, ரேவதி தம்பதியர். இவர்களின் மகள் சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதியில் வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். சங்கீதாவிற்கு 38 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையுடன் சங்கீதா, உட்கோட்டையில் தனது பெற்றோர்களுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி அதிகாலையில் தனது குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு, சங்கீதாவும் தூங்கிவிட்டார். இதையடுத்து, காலை எழுந்து பார்த்தபோது, தனது அருகில் படுத்திருந்த குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தேடி பார்த்தில் வீட்டுக்கு பின்புறம் இருந்த தண்ணீர் பேரலில் போர்வையுடன் குழந்தை மூழ்கடிக்கப்பட்டு இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது.

இதையும் படியுங்கள் : இந்து உணவு, இஸ்லாமியர் உணவு என வகைப்படுத்துவதா? ஏர் இந்தியா விமானங்களின் உணவுப் பட்டியல் குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு!

இதனால், அதிர்ச்சி அடைந்த தாய் சங்கீதா ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சங்கீதா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு, குழந்தையின் இறப்பு குறித்து விசாரணை நடத்தினர்.

குழந்தையின் தாத்தா வீரமுத்து, பாட்டி ரேவதி ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தில் சந்தேகம் எழுந்த நிலையில், தாத்தா வீரமுத்துவை தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் தனது பேரனை தானே கொன்றதாக வீரமுத்து ஒத்துக் கொண்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது :

"குழந்தையின் தாத்தா வீரமுத்து (58) என்பவர் சித்திரை மாதம் (மே 06) குழந்தை சாத்விக் பிறந்ததால், தனது குடும்பத்திற்கு ஆபத்து என்றும், தனது சம்மந்தி குடும்பத்திற்கும் ஆபத்து என்றும் அனைவரும் கூறியதாலும் நடுமகள் சங்கீதாவின் திருமணத்திற்கு ஏற்கனவே நிறைய கடன் வாங்கியதாலும் மேலும் இந்த குழந்தை பிறந்ததால் இதற்கு சீர் செய்ய வேண்டி கடன் வாங்கியதாலும் விரக்தியில் இருந்தேன்.

மேலும் தனக்கு ஆண் மகன் இருந்திருந்தால் சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் அவனது உயிருக்கு ஆபத்து என்றும் ஆண் மகன் இல்லாததால் தாத்தாவாகிய தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்றும் அனைவரும் கூறியதால் முதலில் குழந்தையை தூக்கிக் கொண்டு எங்கேயாவது விட்டு விட்டு வந்துவிடலாம் என்று எண்ணினேன்.

சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தையால், தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற பயத்தால் உணர்ச்சிவசப்பட்டு அதிகாலை குழந்தையை தூக்கிக் கொண்டு தண்ணீர் நிரம்பிய பேரலில் குழந்தையை போட்டு மூடி விட்டு வீட்டில் வந்து வழக்கம்போல் உறங்கிவிட்டேன்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன், குழந்தையை கொன்ற தாத்தா
வீரமுத்துவை கைது செய்தார். மேலும் உட்கோட்டை வீட்டில் வைத்து வீரமுத்து
குழந்தையை எப்படி கொன்றார் என்பதை நடித்துக் காட்டி, காவல்துறையினர் வீடியோ பதிவு செய்துள்ளனர். மற்றவர்கள் பேச்சைக் கேட்டு சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது என்ற அச்சத்தின் காரணமாக தாத்தாவே 38 நாட்களை ஆன பேரனை தண்ணீர் பேரலில் மூழ்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement