பெங்களூரு அணிக்கு 288 ரன்களை இலக்காக நிர்ணயித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 30வது லீக் ஆட்டம் இன்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியும், ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர்.
இவர்கள் இருவரும் அதிரடியாக ஆடினர். அபிஷேக் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹெண்ட்ரிச் கிளாசனுடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் பெங்களூரு சிறப்பாக ஆடினார். அவர் 39 பந்துகளில் சதம் அடித்தார். ஹெட் 41 பந்துகளில் 9 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் உள்பட 102 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார். ஹெண்ட்ரிச் கிளாசனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 31 பந்துகளில் 2 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் உள்பட 67 ரன்கள் குவித்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.
அடுத்ததாக மார்க்ரம், அப்துல் சமத் களமிறங்கினர். அவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில், 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. மார்க்ரம் 17 பந்துகளில் 32 ரன்களுடனும், சமத் 10 பந்துகளில் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆர்சிபி அணி தரப்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும், ரீசே டோப்லி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 288 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி ஆடி வருகிறது.
முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் மார்ச் 27-ம் தேதி நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களை குவித்து அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் சாதனையை படைத்திருந்தது ஹைதராபாத். தற்போது தனது ரெக்கார்டை தானே முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. அதன்படி ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் என்பது ஹைதராபாத்தின் இன்றைய 287 என்பது குறிப்பிடத்தக்கது.