விண்வெளி நிலையத்திற்கு மீன்குழம்பு, விநாயகர் சிலை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்.. என்ன காரணம் தெரியுமா!
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு சென்றுள்ளார்.
அமெரிக்காவில் வசித்து வரும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் இரண்டு முறை விண்வெளிக்கு சென்றுள்ள நிலையில், தற்போது மூன்றாவது முறையாக விண்வெளிக்கு சென்றுள்ளார். இவருடன் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோரும் சென்றார்.
இவர்கள் அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, அட்லஸ் வி ராக்கெட் மூலம் விண்வெளி ஆய்வு மையம் புறப்பட்டனர். இதன்மூலம் உயர் ரக விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் சென்ற முதல் பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்ததை அடுத்து அங்கு சுனிதா வில்லியம்ஸ் உற்சாக நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது இரண்டு பயணங்களின்போதும் தன்னோடு பகவத்கீதை புத்தகத்தை எடுத்து சென்றார் சுனிதா வில்லியம்ஸ். இந்நிலையில் தற்போது இந்த பயணத்தில் மீன் குழம்பு, விநாயகர் சிலை போன்றவற்றை எடுத்துச் சென்றுள்ளார்.
மீன் குழம்பு வீட்டில் இருப்பது போன்ற உணர்வை தரும் என்றும், விநாயகர் சிலை தனக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்றும் பயணத்திற்கு முன்பு தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.