#SEBI தலைவர் மாதபி பூரி புச்-க்கு சம்மன் - நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு அதிரடி!
செபி தலைவர் மாதவி பூரி புச்சுக்கு எதிரான முறைகேடு புகார்கள் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை ஒழுங்குமுறை வாரியம் (SEBI) தலைவராக பணியாற்றி வரும் மாதபி பூரி புச் மீது, ஹிண்டன்பர்க் அறிக்கையில் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதில், அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாகவே அதானியின் சந்தேகத்துக்குரிய நிறுவனங்கள் மீது செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
மாதபி பூரியின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், அதானி குழுமம் மீதான விசாரணை குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று ஹிண்டன்பர்க் அறிக்கை தெரிவித்தது. தன் மீதான குற்றச்சாட்டை மாதபி பூரி புச் மறுத்தார். ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை எனவும், எங்களுடைய வாழ்க்கையும், நிதி பரிமாற்றங்களும் திறந்த புத்தகம்போல வெளிப்படையானவை எனவும் மாதபி புரி தெரிவித்தார்.
மேலும், ஹிண்டன்பர்க்கின் முந்தைய அறிக்கை தொடர்பாக செபி நோட்டீஸ் அனுப்பி இருந்ததாகவும், அதற்கு பழிவாங்கும் நோக்கில் செபியின் பெயரை கெடுக்கும் வகையில் தற்போது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது என்று மாதபி புரி மற்றும் அவரது கணவர் இருவரும் அறிக்கை வெளியிட்டிருந்தனர். மாதபி பூரி புச், விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. அவர், 2017-ம் ஆண்டு முதல் இதுவரை அவர் ரூ.16.8 கோடி பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனால், மாதபி புரி புச் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி மும்பை செபி தலைமையகம் முன்பு செபி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே, மாதவி பூரி புச்-க்கு எதிரான முறைகேடு புகார்கள் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணையை தொடங்கியது. அவரிடம் விசாரிக்க பொதுக் கணக்குக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், மாதபி பூரி புச் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.