கோடை விடுமுறை | திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்..!
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்
சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. மேலும்
கடற்கரை அருகில் அமைந்திருப்பதால் திருவிழா மற்றும் விசேஷ நாட்களை தவிர்த்து
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், காலை 06
மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில்
புனித நீராடி பொது தரிசனத்தில் சுமார் 4 மணி நேரமும், ரூ.100 கட்டன
தரிசனத்தில் சுமார் 3 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து
வருகின்றனர்.
மேலும் பல்வேறு பகுதிகளிலுந்தும் குடும்பத்துடன் வந்திருந்த பக்தர்கள் கடலில் குழந்தைகளுடன் குளித்து விளையாடி குதூகலித்து வருகின்றனர். தொடர் விடுறையையொட்டி திருவிழா போல நாள்தோறும் வரும் பதர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கழிப்பறை , குடிநீர், பேருந்து சேவை உள்ளிட்ட
அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளது.
மேலும் வாகனம் நிறுத்துமிடம் இல்லாததால் நகர் பகுதியில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் கூடுதல் கவனம் செலுத்தி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூடுதலாக செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.